சர்ஜிக்கல் ஸ்டிரைக் தினத்தை கொண்டாட அரசு முடிவு
துல்லியத் தாக்குதல் எனப்படும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டதன் இரண்டாம் ஆண்டு தினத்தை பிரம்மாண்டமாக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பாகிஸ்தான் காஷ்மீர் பகுதியில் இருந்த தீவிரவாத நிலைகள் மீது கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி இந்திய ராணுவம் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியது. இந்தியாவின் உரி பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இத்தாக்குதல் நடத்தப்பட்டதை அரசு சாதனையாக கருதுகிறது. இந்நிலையில் இத்தாக்குதலின் இரண்டாம் ஆண்டான வரும் 29-ம் தேதியை சர்ஜிக்கல் ஸ்டிரைக் தினமாக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதனையொட்டி பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் அந்த தினத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை மேற்கொள்ளலாம் என மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. முப்படைகளின் உபகரணங்கள், சாதனங்கள் இடம்பெறும் வகையில் வரும் 28-ம் தேதி முதல் 30-ம் தேதிவரை டெல்லி இந்தியாகேட் பகுதியில் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்த உள்ளார்.