“சீட் தரவில்லையென்றால் கட்சியில் இருந்து விலகுகிறேன்” - பாஜக எம்.பி
மக்களவைத் தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை எனில், பாஜகவிலிருந்து விலகப் போவதாக டெல்லியின் வடமேற்கு தொகுதி எம்.பி. உதித்ராஜ் தெரிவித்துள்ளார்.
வடமேற்கு டெல்லி தொகுதி எம்பியாக இருப்பவர் உதித்ராஜ். தற்போதைய மக்களவைத் தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட தனக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென கோரி வருகிறார். கோரிக்கையை முன்வைத்து டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.
6 ஆம் கட்ட தேர்தல் நடைபெறும் மே 12 ஆம் தேதி டெல்லியில் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், கிழக்கு டெல்லியில் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர், புதுடெல்லியில் மீனாட்சி லேகி ஆகியோரை வேட்பாளர்களாக பாஜக அறிவித்துள்ளது. ஆனால், உதித்ராஜின் கோரிக்கை மற்றும் போராட்டம் காரணமாக, வடமேற்கு தொகுதியின் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், டெல்லி எம்பிக்களிலேயே தாம் சிறப்பாக செயல்பட்டபோதும், தனக்கான வாய்ப்பு குறித்து பாஜக உறுதிபடுத்தவில்லை என்று உதித்ராஜ் கூறியுள்ளார். சீட்டு பெறுவது தொடர்பாக பாஜக தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடி ஆகியோரை சந்திக்க முயன்றும், முடியவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அதிருப்தியின் தொடர்ச்சியாக, வடமேற்கு தொகுதியின் வேட்பாளர் என்ற அறிவிப்புக்காகக் காத்திருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள உதித் ராஜ், வாய்ப்பளிக்கப்படவில்லை எனில் பாஜகவிலிருந்து விலகப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.