இந்துக்களின் உணர்வுகளோடு விளையாடாதீர்கள்: உத்தவ் தாக்கரே!
இந்துகளின் உணர்வுகளோடு விளையாடாதீர்கள் என்பதை சொல்லிக் கொள்ளவே அயோத்திக்கு வந்திருக்கிறேன் என்று சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் பிரமாண்ட பேரணியை இன்று நடத்துகிறது. இதற்காக லட்சக்கணக்கானோர் அயோத்தியில் முகாமிட்டுள்ளனர்.
இந்தப் பேரணியில் பங்கேற்பதற்காக சிவசேனாத் தலைவர் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்ரேவுடன் அயோத்தி வந்துள்ளார். ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி அவர் தனது குடும்பத்தினருடன் சரயு நதிக்கரையில் சிறப்பு பூஜை நடத்தினார். அப்போது, ராமர் கோயில் கட்டும் பணி எப்போது தொடங்கும் என்பதை பிரதமர் மோடி தெரிவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
அவர் கூறும்போது, ‘அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதை இந்தியர்களும் இந்துக்களும் எதிர்பார்க்கிறார்கள். சாதுக்கள் என்னை நேற்று ஆசிர்வதித்தனர். அவர்களிடம், உங்கள் ஆசிர்வாதம் இல்லாமல் கோயில் கட்டப்படாது என்று தெரிவித்தேன். நான் அயோத்தி வந்திருப்பதில் எந்த மறைமுக நோக்கமும் இல்லை.
உலகம் முழுவதும் வாழும் இந்தியர்கள் மற்றும் இந்துக்களின் உணர்வுகளை பிரதிபலிப்பதற்காகவே இங்கு வந்துள்ளேன். ராமர் கோயிலுக்காகவே அனைவரும் காத்திருக்கிறோம். அந்த பணியை விரைவில் தொடங்க வேண்டும். இந்துகளின் உணர்வுகளோடு விளையாடாதீர்கள் என்பதை சொல்லிக்கொள்ளவே வந்திருக்கிறேன்’ என்றார்.
பேரணியில் விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் சிவசேனா கட்சித் தொண்டர்கள் சுமார் 2 லட்சம் பேர் பங்கேற்பர் எனத் கூறப்படுகிறது. இதை யொட்டி அயோத்தியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.