'ஆபரேஷன் டைகர்' | கட்சி தாவும் எம்பிக்கள்.. உத்தவ் தாக்கரே எடுத்த திடீர் முடிவு!
மகாராஷ்டிராவில் சிவசேனா மேலும்மேலும் சிதைவுண்டு வருகிறது. ஏற்கெனவே முன்னாள் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, சிவசேனாவை இரண்டாக உடைத்து, அதைத் தற்போது தன்வசப்படுத்தியுள்ளார். இதனால், உத்தவ் தாக்கரே தரப்பில் UBT என்ற பெயரில் கட்சி இயங்க ஆரம்பித்தது. இந்த நிலையில், அக்கட்சியில் மேலும் பிளவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. உத்தவ் தாக்கரே, சமீபத்தில் முக்கியமான ஒற்றுமைக் கூட்டத்தைக் கூட்டியிருந்தார். இதில் அவருடைய 9 எம்பிக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இதில் சஞ்சய் ஜாதவ், சஞ்சய் தேஷ்முக், ஓம்ராஜே நிம்பல்கர், பாவுசாஹேப் வக்சௌரே மற்றும் நாகேஷ் பாட்டீல் அஷ்டிகர் ஆகிய 5 எம்பிக்கள் கலந்துகொள்ளவில்லை. இதனால், அவர்கள் சிவசேனாவில் ஐக்கியமாகலாம் எனத் தகவல் பரவியது. இதேபோல், 14 முதல் 16 எம்எல்ஏக்களும் உத்தவ் தாக்கரே அணியிலிருந்து விலகி, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணையக்கூடும் என்ற யூகங்கள் வலுத்து வருகின்றன.
இதற்கிடையே, கடந்த 18ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில் அவரது கட்சியின் ஒன்பது மக்களவை உறுப்பினர்களில் மூன்று பேர் மட்டுமே கலந்துகொண்டனர். இது, மேலும் விவாதத்தை ஏற்படுத்தியது. எனினும், இதில் கலந்துகொண்ட அரவிந்த் சாவந்த், ராஜபாவு வாஜே மற்றும் அனில் தேசாய் ஆகிய எம்பிக்கள் உத்தவ் தலைமையிலான அணியால் நடத்தப்பட்ட கட்சியின் நிறுவன நாள் கொண்டாட்டங்களில் கெளரவிக்கப்பட்டனர்.
அந்நிகழ்வில் பேசிய UBT தலைவர் உத்தவ் தாக்கரே, “நீங்கள் விரும்பினால், நான் தலைவர் பதவியிலிருந்து விலகத் தயார். உங்களில் யார் வேண்டுமானாலும் இந்தப் பொறுப்பை ஏற்கலாம். நான் இந்தப் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று நீங்கள் கருதும்போது, நான் விலகுவேன். ஆனால், நான் இங்கு இருக்கும்வரை, ஒரு வலிமையான மலையைப்போலப் போராடுவேன். சிவசேனா கட்சித் தொண்டர்கள் நம்பிக்கையற்று இருப்பார்கள் என்று பலர் நினைத்திருக்கலாம், ஆனால் அது உண்மையல்ல. சிவசேனா தொண்டர்கள் என்னுடன் இருக்கும்வரை, நான் எந்த சவாலையும் எதிர்கொள்வேன்” என்றவர், பாஜகவையும் கடுமையாகச் சாடினார். அவர், “பாஜகவின் அனைத்து எம்பிக்களும் மற்ற கட்சிகளிலிருந்து கடன் வாங்கப்பட்டவர்கள் என்பதால், நாடாளுமன்றத்தில் அக்கட்சிக்கு உண்மையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லை. துரோகிகள் தங்கள் கைகளில் உண்மையான காவிக்கொடியை ஏந்த முடியாது” எனச் சாடினார்.
இதற்கிடையே, டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறியதற்காக நாகேஷ் ஆஷ்டிகர், சஞ்சய் தேஷ்முக், சஞ்சய் ஜாதவ், சஞ்சய் தினா பாட்டீல், ஓம்பிரகாஷ் ராஜேனிம்பல்கர் மற்றும் பௌசாஹேப் வக்சௌரே ஆகியோர் மீது சிவசேனா (யுபிடி) ஒழுங்கு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. கட்சியானது ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளதுடன், பதிலளிக்க ஏழு நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளது; அவ்வாறு செய்யத் தவறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. மறுபுறம், இந்த நிகழ்வுகள், மகாராஷ்டிர அரசியல் வட்டாரங்களில் சுருக்கமாகக் குறிப்பிடும் 'ஆபரேஷன் டைகர்' எனும் முன்னெடுப்பின் நினைவுகளை மீண்டும் கொண்டு வந்துள்ளன.

