உ.பி. மேலவைத் தேர்தல்: பாஜகவினர் அனைவரும் போட்டியின்றி வெற்றி
உத்தரப் பிரதேச சட்ட மேலவைத் தேர்தல் நடைபெற்ற 5 இடங்களிலும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் காலியாக இருந்த 5 சட்ட மேலவை இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக சார்பில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மெளரியா மற்றும் சுதந்திர தேவ் சிங், மொசின் ராசா, தினேஷ் சர்மா உள்ளிட்ட அமைச்சர்கள் போட்டியிட்டனர். இவர்களில் மொசின் ராசா தவிர மற்ற 4 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக கடந்த 8 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இருப்பினும் மொசின் ராசா வெற்றி பெறுவதில் குழப்பங்கள் ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது அவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் உத்தரப் பிரதேசத்தின் 5 சட்ட மேலவை இடங்களுக்கான போட்டியிலும் பாஜகவினர் 5 பேரும் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளனர். இதனால் உத்தரப் பிரதேசத்தின் சட்ட மேலவையில் உள்ள 100 இடங்களில் பாஜகவின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. மேலும், முதலமைச்சர் யோகி உள்ளிட்ட 5 பேரும் சட்டமன்றத்தின் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் அவர்கள் பதவியில் நீடிப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

