உ.பி. சட்ட மேலவை தேர்தல்: யோகி ஆதித்யநாத் போட்டி
உத்தரப்பிரதேச சட்டமேலவை தேர்தலில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உட்பட 5 பேர் போட்டியிட உள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி பாஜக வெற்றி பெற்றது. இதையடுத்து உத்தரப்பிரதேச முதலமைச்சராக யோகி ஆதித்யநாத்தும், துணை முதலமைச்சராக கேசவ் பிரசாத் மெளரியாவும் பதவியேற்றனர். இவர்களுடன் சுதந்திர தேவ் சிங், மொசின் ராசா, தினேஷ் சர்மா ஆகிய 3 பேரும் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
இவர்கள் 5 பேரும் சட்டப்பேரவை அல்லது சட்டமேலவை ஆகிய இரண்டு அவைகளிலுமே உறுப்பினராக இல்லை. அதனால் முதலமைச்சர் யோகி உள்ளிட்ட 5 பேரும் செப்டம்பர் 19ஆம் தேதிக்குள் சட்டப்பேரவை அல்லது சட்டமேலவையில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது கட்டாயமாகும்.
இந்நிலையில் வரும் 15ஆம் தேதி உத்தரப்பிரதேச சட்டமேலவைக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் காலியாக உள்ள 5 இடங்களுக்கும் யோகி உள்ளிட்ட 5 பேரும் போட்டியிடவுள்ளனர்.