போலீஸ் கஸ்டடியில் இளைஞரை பெல்ட்டால் தாக்கி தலைமுடி மழிப்பு; ஆந்திராவில் கொடூரம்

போலீஸ் கஸ்டடியில் இளைஞரை பெல்ட்டால் தாக்கி தலைமுடி மழிப்பு; ஆந்திராவில் கொடூரம்

போலீஸ் கஸ்டடியில் இளைஞரை பெல்ட்டால் தாக்கி தலைமுடி மழிப்பு; ஆந்திராவில் கொடூரம்

காவல் நிலையத்தில் பட்டியலின இளைஞர் ஒருவரை பெல்டால் அடித்து, தலைமுடியை மழித்த குற்றச்சாட்டில் இரண்டு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள வேதுல்லப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் வரபிரசாத். பட்டியலினத்தவர். அவரை அந்த பகுதியில் உள்ள சீதனகரம் காவல் நிலைய காவல் உதவியாளர் மற்றும் காவலர் ஒருவர், காவல் நிலையத்திலேயே வைத்து கடுமையாக தாக்கிய விவகாரம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உள்ளூர் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்காரர் ஒருவரை வரபிரசாத் எதிர்த்து பேசியதாக சொல்லி போலீசார் அவரை  காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்ட வரபிரசாத் தற்போது சிகிச்சைக்காக ராஜமுந்திரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது “எங்கள் பகுதியில் ஒரு துக்க சம்பவம் ஏற்பட்டதால் நானும் அக்கம் பக்கத்தினர் மூன்று பேரும் எங்களது வீதியின் வழியாக செல்லும் வாகனங்களை மாற்று பாதையில் அனுப்பிக் கொண்டிருந்தோம். அப்போது மணல் லாரி ஒன்று வந்தது. மாற்று பாதையில் செல்லுமாறு அதன் டிரைவரிடம் கூறினோம். அப்படியில்லை என்றால் சடங்குகளுளை முடித்து இறந்தவரின் உடலை எடுக்கும் வரை சிறிது நேரம் காத்திருக்குமாறு டிரைவரிடம் கேட்டுக்கொண்டோம்.

அதற்குள் இதனை அறிந்து உள்ளூரை சேர்ந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் மணல் லாரியை நிறுத்தியதற்காக எங்களிடம் வாக்குவாதம் செய்தார். மறுநாள் (திங்கள்கிழமை) காலை சீதனகரம் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்களுடன் எங்கள் கிராமத்திற்கு வந்து என்னையும், சம்பவத்தின் போது என்னோடு இருந்த இருவரையும் காவல் நிலையத்திற்கு விசாரணை என்ற பெயரில் கூட்டிச் சென்றனர். 

அங்கு சப்-இன்ஸ்பெக்டர் என்னை பெல்டால் அடித்து, கால்களால் எட்டி உதைத்தார். அதுமட்டுமல்லாது முடி வெட்டுபவரை வரச் சொல்லி எனது தலைமுடி மற்றும் மீசையை மழித்து விட்டார்” என்றார். 

இந்த விவகாரம் தொடர்பாக ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது கண்டனத்தை தெரிவித்தார். பட்டியலின அமைப்புகளும் போராட்டத்தில் இறங்கியதை அடுத்து காவல் துறை உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட போலீஸ் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com