தொடர் சரிவில் ஆட்டோ மொபைல் துறை - 2 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பு
வாகன விற்பனை தொடர்ந்து சரிவைக் கண்டு வரும் நிலையில், அத்துறை சார்ந்த நிறுவனங்கள் வேலையில்லா நாட்களை அறிவித்து வருகின்றன. இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது.
பயணிகள் வாகன விற்பனை தொடர்ந்து 9ஆவது மாதமாக சென்ற ஜூலையில் 31 சதவிகிதம் சரிவைச் சந்தித்துள்ளதாக வாகன உற்பத்தியாளர் சங்கமான சியாம் தெரிவித்துள்ளது. சென்ற ஜூலையில் விற்பனை 19 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளதாகவும் சியாம் தெரிவித்துள்ளது. இதனால், ஏற்கனவே இந்தத் துறையில் 2 லட்சம் பேர் வேலையிழந்துள்ளதாக தெரிவித்துள்ள வாகன உதிரிபாக தயாரிப்பு நிறுவனங்கள் சங்கம், இந்த நிலை தொடர்ந்தால் 10 லட்சம் பேர் வேலை இழக்கக்கூடும் என்ற அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், நடப்பு ஆண்டின் முதல் 4 மாதங்களில் கார், பைக் உள்ளிட்ட பயணிகள் வாகன உற்பத்தி 13 புள்ளி 8 சதவிகிதம் சரிவைக் கண்டுள்ளதாகவும் சியாம் கூறியுள்ளது. முன்னணி நிறுவனங்களான மாருதி சுசுகி, மஹிந்தரா அண்டு மஹிந்தரா, டொயோட்டோ கிர்லோஸ்கர், ஃபோர்டு உள்ளிட்ட நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்து வருகின்றன.
வாகன தயாரிப்பு மற்றும் விற்பனை துறையில் ஏற்பட்டுள்ள மந்தநிலை காரணமாக பல முன்னணி நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு வேலையில்லா நாட்களை அறிவித்து வருகின்றன. குறிப்பாக, சென்னையை மையமாகக் கொண்டு இயங்கும் முன்னணி வாகன உதிரிபாக தயாரிப்பு நிறுவனமான லூகாஸ் டிவிஎஸ் இன்றும் நாளையும் வேலையில்லா நாட்கள் என அறிவித்துள்ளது.
அதேபோல், நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகனங்கள் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டார் நிறுவனமும் விற்பனை சரிவு காரணமாக வரும் 18ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு தொழிற்சாலையை மூடியுள்ளதாக அறிவித்துள்ளது. அதேபோல், டொயோட்டோ கிர்லோஸ்கர் நிறுவனமும் இன்றும் நாளையும் வேலையில்லா நாட்களாக அறிவித்துள்ளது.
வாகன சந்தையில் உள்ள கடும் மந்தநிலையை புரிந்துகொண்டு ஒத்துழைக்குமாறு அந்நிறுவனம் தொழிலாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆட்டோமொபைல் துறை மீண்டும் புத்துயிர் பெற தற்போதுள்ள 28 சதவீதம் ஜி.எஸ்.டி வரியை 18 சதவீதமாக குறைக்க வேண்டும் என்றும் இத்துறை சார்ந்தவர்களின் கோரிக்கையாக உள்ளது. ரிவர்ஸ் கியரில் பயணிக்கும் வாகனத்துறையை மீட்டெடுக்க அரசு விரைவில் பல்வேறு ஊக்கத்திட்டங்களை அறிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது