ஆசிபா விவகாரம்: பாஜக அமைச்சர்கள் இருவர் ராஜினாமா
காஷ்மீரில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட விவகாரத்தில் இரு அமைச்சர்கள் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தை சேர்ந்த எட்டுவயது சிறுமி ஆசிபா. கடந்த ஜனவரி 10-ஆம் தேதி காணாமல் போனாள். காணாமல் போய் ஒருவாரத்திற்குப் பிறகு ரஸானா வனப்பகுதியில் இருந்து சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக ஜம்மு காஷ்மீர் குற்றப்புலனாய்வுத்துறை நடத்திய விசாரணையில், ஒரு சிறுவன் உட்பட 8 பேர் சேர்ந்து சிறுமியை வழிபாட்டுத்தலம் ஒன்றில் மறைத்து வைத்து பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது தெரியவந்துள்ளது. இவ்விவகாரத்தில் சிறுமியை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியவர்களுக்கு ஆதரவாக இந்த இரு அமைச்சர்களும் செயல்பட்டதாகவும் காஷ்மீர் எதிர்க்கட்சித் தலைவர் ஓமர் அப்துல்லா குற்றஞ்சாட்டியிருந்தார். எனவே இவ்விருவரையும் முதலமைச்சர் மெஹபூபா தனது அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்றும் அப்துல்லா கூறியிருந்தார்.
இந்நிலையில் வனத்துறை அமைச்சர் சவுத்ரி லகால் சிங் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் சந்தர் பிரகாஷ் சிங் ஆகிய இருவரும் மாநில பாரதிய ஜனதா தலைவரிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்தனர். இதற்கிடையில் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்கள் இருவரையும் அமைச்சரவையில் இருந்து திரும்பப் பெற பாரதிய ஜனதா கட்சி தலைமையை அம்மாநில முதல்வர் மெஹபூபா கேட்டுக்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது