காஞ்சிபுரம் வந்த நாகலாந்தை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் மீட்பு
நாகலாந்தில் இருந்து தமிழகத்திற்கு வந்து தஞ்சமடைந்த இரண்டு பள்ளி சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
நாகலாந்து மாநிலத்தின் திம்மாபூர் மாவட்டத்தைச் சார்ந்த 11-ஆம் வகுப்பு மாணவனும் 9ஆம் வகுப்பு மாணவியும் கடந்த மார்ச் மாதம் நாகலாந்தில் இருந்து தங்களின் பெற்றோர்களுக்கு தெரிவிக்காமல் தமிழகத்திற்கு வந்து காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சுங்குவார்சத்திரத்தில் தஞ்சமடைந்துள்ளனர். ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் வேலை நிமித்தமாக தங்கியிருக்கிறார்கள். இதை அறிந்து கொண்ட சிறுவர்கள் இப்பகுதியில் தங்கி ஏதேனும் தொழிற்சாலையில் பணி புரிய திட்டமிட்டிருக்கிறார்கள். இதையடுத்து சிறுவர்களின் பெற்றோர்கள் நாகலாந்து போலீசாரிடம் அளித்த புகாரின் பெயரில் சிறுவர்களின் செல்போன் டவரை வைத்து சிறுவர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள் என்பதை கண்டறிந்து காஞ்சிபுரம் மாவட்ட போலீசாருக்கு நாகலாந்து போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன்பிறகு ஸ்ரீபெரும்புதூர் துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் சிறுவர்களின் செல்போன் டவர் உதவியுடன் இரண்டு சிறுவர்களையும் மீட்டு குழந்தைகள் நல குழுமத்திடம் ஒப்படைத்தார். அச்சமயம் கொரோனா ஊரடங்கு என்பதனால் சிறுவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க இயலாத காரணத்தினால் இரண்டு சிறுவர்களையும் தனித்தனியே அரசு காப்பகத்தில் தங்க வைத்திருந்தனர். இந்நிலையில் இன்று நாகலாந்தில் இருந்து குழந்தை நல குழும உறுப்பினர்கள் மற்றும் போலீசார் விமானம் மூலம் காஞ்சிபுரம் வந்து சிறுவர்களை அழைத்துச் சென்றார்கள்.