விவசாயிகள் போராட்டம்... தவறான ட்வீட்... - பாஜக ஐ.டி விங் தலைவரை எச்சரித்த ட்விட்டர்!

விவசாயிகள் போராட்டம்... தவறான ட்வீட்... - பாஜக ஐ.டி விங் தலைவரை எச்சரித்த ட்விட்டர்!
விவசாயிகள் போராட்டம்... தவறான ட்வீட்... - பாஜக ஐ.டி விங் தலைவரை எச்சரித்த ட்விட்டர்!

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக தவறான ட்வீட் பதிவிட்ட பாஜக ஐ.டி விங் தலைவரை ட்விட்டர் நிறுவனம் எச்சரித்துள்ளது.

விவசாயிகளின் `டெல்லி சலோ' போராட்டம் 8-வது நாளாக தொடர்ந்து வருகிறது. மத்திய அரசு - விவசாயிகள் இடையில் பேச்சுவார்த்தை மூலம் இன்னும் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. இதற்கிடையே, விவசாயிகள் டெல்லியை நோக்கி வந்தபோது முதியவர் ஒருவரை போலீஸார் தாக்குவது போன்ற புகைப்படமும் வீடியோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி இந்தப் புகைப்படங்களை பதிவிட்டிருந்தார்.

ஆனால், பாஜக ஐ.டி விங் தலைவர் அமித் மால்வியா, ராகுல் காந்தி பகிர்ந்த ட்வீட்டை பகிர்ந்து 'இது பொய்த் தகவல்' என்று கூறி, முதியவர் மீது போலீஸாரின் லத்தி படவேயில்லை என்றார். அதற்குச் சான்றாக அவரும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்தார். அமித் மால்வியாவின் இந்த ட்வீட்டை ஆராய்ந்த ட்விட்டர் நிறுவனம், மால்வியாவின் ட்வீட்டை 'கையாளப்பட்ட ஊடகங்கள்' என்று குறித்தது. மேலும் பொய்யானத் தகவலை பரப்பக்கூடாது. அது எங்களின் ஊடகக் கொள்கைக்கு எதிரானது என்றும் தெரிவித்தது.

உண்மையில், அந்த விவசாயி போலீஸாரால் தாக்கப்பட்டுள்ளார். மால்வியா பகிர்ந்த புகைப்படத்தில் இரண்டாவது அதிகாரி தனது தடியடியை அந்த நபர்மீது வீசுவதைக் காட்டுகிறது. ஆனால், அதற்கு முன்பே ஒருவர் விவசாயியை தாக்கியிருப்பார். இதனை ட்விட்டர் நிறுவனம், ஃபேக்ட் செக் செய்த பின்பே மால்வியாவை எச்சரித்தது.

மேலும், "நான் பாதிக்கப்படவில்லை என்று அவர்கள் கூறலாம்; ஆனால் அவர்கள் வந்து என் காயங்களைப் பார்க்க விரும்பினால் நான் இங்கேயே இருக்கிறேன்" என்று பஞ்சாபின் கபுர்தலா மாவட்டத்தில் சங்கோஜ்லாவைச் சேர்ந்த அடிபட்ட அந்த விவசாயி சுக்தேவ் சிங் பூம் லைவ்விடம் பேசியுள்ளார். இதனையும் ட்விட்டர் நிறுவனம் மேற்கோள் காட்டியுள்ளது.

இதற்கிடையே, விவசாயிகள் போராட்டம் தொடர்பாக பேசிய அமித் மால்வியா, "பஞ்சாப் பிரிவினைவாதிகளான காலிஸ்தான் மற்றும் மவோயிஸ்ட்கள் போராட்டத்தில் புகுந்துள்ளனர். இவர்கள் பாகிஸ்தான், காலிஸ்தான் ஆதரவு கோஷங்களை எழுப்பி வருகின்றனர். இதை அறிந்து டெல்லி பற்றி எரியவேண்டும் என்ற தங்கள் ஆசையை நிறைவேற்ற ஆம் ஆத்மி துடிக்கிறது. அவர்களுக்கு விவசாயிகள் மீது அக்கறை இல்லை" எனக் கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com