பத்து தலை ராவணனுக்கு எத்தனை ஆதார் அட்டைகள்? ட்விட்டரில் கலகல விவாதம்!
பத்து தலை கொண்ட ராவணனுக்கு ஆதார் அட்டை வழங்குவதாக இருந்தால் எத்தனை அட்டைகள் வழங்க வேண்டும் என்று விஜயதசமியை முன்னிட்டு டிவிட்டரில் சுவாரசியமான விவாதம் நடைபெற்றது.
தசரா பண்டிகையான வடமாநிலங்களில் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற தசரா விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு, பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வடமாநிலங்களில் தசரா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்ட நிலையில் ராவணனுக்கு ஆதார் எண் வழங்குவது குறித்து ட்விட்டரில் பெரிய விவாதமே நடைபெற்றது. பத்து தலை கொண்ட ராவணனுக்கு ஆதார் அட்டை வழங்குவதாக இருந்தால் எத்தனை அட்டைகள் வழங்க வேண்டும் என்று ஆதார் ட்விட்டர் பக்கத்தில் (UIDAI) கிண்டலாக கேள்வி எழுப்பி இருந்தார். இதில் என்ன விவகாரம் என்றால் பதிவிட்ட நபர் ஆதாரை அழிக்க வேண்டும் (DestroyTheAadhaar) என்ற பெயரில் பதிவு செய்திருந்தார். இதனை தொடர்ந்து ஏராளமானோர் விதவிதமான பதில்களை பதிவு செய்தனர். மிகவும் கலகலப்பாக இந்த விவாதம் நடைபெற்றது. பலரும் இந்த விவாதத்தில் பங்கேற்று நகைச்சுவையான பதில்களை பதிவிட்டனர்.
இதில் ராவணன் இலங்கையைச் சேர்ந்தவர் இந்திய பிரஜை அல்ல என்று கூறப்பட்ட பதில் அதிகமான லைக்குகளை அள்ளியது. இன்னொருவர், கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து ஆதார் தரலாம். ஆனால் 500 ரூபாய் லஞ்சம் தரவேண்டியிருக்கும் என்று டிவிட்டரில் பதிவு செய்திருந்தார்.