ரூ.1.83 லட்சம் கோடி சொத்து.. TVS குடும்பத்தில் வெடித்த வாரிசுப் போர்!
டிவிஎஸ் குழுமத்தைச் சேர்ந்த வேணு சீனிவாசன் மற்றும் மல்லிகா சீனிவாசன் குடும்பத்தில் சொத்துப் பிரிப்பு தொடர்பாகக் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வேணு சீனிவாசன் மற்றும் அவரது மகன் சுதர்சன் வேணு ஒரு தரப்பிலும், மல்லிகா சீனிவாசன் மற்றும் அவரது மகள் லட்சுமி வேணு மற்றொரு தரப்பிலும் இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த 18 மாதங்களாக நீடித்துவரும் இந்தப் பிரச்னையைத் தீர்க்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்காததால், சட்ட நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரத்தின் முக்கியக் கேள்வி, நிறுவனங்களை நிர்வகிக்கும் பொறுப்பைப் பிரித்துக் கொடுத்ததன் மூலம் குடும்பச் சொத்துகளும் பிரிக்கப்பட்டுவிட்டனவா என்பதுதான்.
லட்சுமி வேணு, வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் சுந்தரம் கிளேட்டன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கிறார். சுதர்சன் வேணு, இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களைத் தயாரிக்கும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவராகவும் நிர்வாக இயக்குநராகவும் இருக்கிறார். மேலும், டிவிஎஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் அவர் செயல்படுகிறார்.
இரு நிறுவனங்களின் சந்தை மதிப்பில் ஏற்பட்டுள்ள பெரிய வித்தியாசமும் இந்தப் பிரச்னையைத் தீவிரப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் சந்தை மதிப்பு கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் ரூ.1.83 லட்சம் கோடியாகவும், சுந்தரம் கிளேட்டன் நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் ரூ.24,000 கோடியாகவும் இருந்தது. இதனால், தனக்கு மிகக் குறைந்த பங்களிப்பே கிடைத்துள்ளதாக லக்ஷ்மி வேணு தரப்பு கருதுகிறது
2024 மார்ச் 21 அன்று குடும்பத்தின் நான்கு உறுப்பினர்களும் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) இந்தச் சர்ச்சையின் மையமாக உள்ளது.
இந்த குடும்ப ஒப்பந்தம் (MoU), வெறும் பிராண்ட் உரிமைகள் மற்றும் நிறுவன நிர்வாகப் பகிர்வு தொடர்பானது மட்டுமே என்றும், அது இறுதி சொத்துத் தீர்வு அல்ல என்றும் லக்ஷ்மி வேணு மற்றும் மல்லிகா சீனிவாசன் தரப்பு வாதிடுகிறது. பாரம்பரிய வாரிசுரிமைச் சட்டப்படி தங்களுக்கு சம பங்கு வேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர். ஆனால், வேணு சீனிவாசன் மற்றும் சுதர்சன் தரப்போ, ஏற்கெனவே சொத்துக்கள் முறைப்படி பிரிக்கப்பட்டுவிட்டதாகக் கருதுகின்றனர்.
டிவிஎஸ் குடும்பத்துக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள், 2026 மார்ச்–ஏப்ரல் மாதங்களில் சுந்தரம் கிளேட்டன் நிறுவனம் தொடர்பான நிகழ்வுகள் மூலம் பொதுமக்களுக்குத் தெரியவந்தன. நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான லக்ஷ்மி வேணு, கார்ப்பரேட் நிர்வாகக் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி நிறுவனச் செயலாளரை (Company Secretary) பதவியிலிருந்து நீக்கினார். ஆனால், அடுத்த 72 மணி நேரத்திற்குள் தந்தை வேணு சீனிவாசன் அவசரக் கூட்டத்தைக் கூட்டி, அந்த உத்தரவை ரத்து செய்து, மீண்டும் அவரைப் பணியில் அமர்த்தியதோடு நிறுவனத்தின் முழுக் கட்டுப்பாட்டையும் தன்வசப்படுத்தினார்

