லட்டு விற்பனை மூலம் ரூ. 400 கோடி வருமானம்? - திருப்பதி பட்ஜெட்
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் 2020 -21ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் போடப்பட்டுள்ளது
ஆந்திர மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்றது முதல் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பல அதிரடியான திட்டங்களை அறிவித்து வருகிறார். ஏழை எளிய பிள்ளைகளும் ஆங்கிலம் கற்கும் வகையில் அரசுப் பள்ளிகளில் இனி ஆங்கிலம் கற்பிக்கப்படும் என்றார். பல ஆண்டுகளாக இயங்கி வந்த மேல்சபையை நிதிச் சுமையைக் காரணம் காட்டி கலைத்தார். இப்படி இவர் முதலமைச்சராக பதவியேற்ற பின், பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் பல ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றினார். திருப்பதி தேவஸ்தான தலைவராக தனது நெருங்கிய உறவினர் சுப்பா ரெட்டியை நியமித்தார். இவர் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் செயலாளராகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் 2020 -21ஆம் நிதியாண்டுக்கு 3,310 கோடி ரூபாய் பட்ஜெட் போடப்பட்டுள்ளது. தேவஸ்தானத்தின் மொத்த வருமானத்தில் பக்தர்களின் காணிக்கை ஆயிரத்து 351 கோடி ரூபாய் என கணிக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் செய்யப்பட்டுள்ள வைப்புத் தொகைக்கு வட்டியாக 706 கோடி ரூபாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
300 ரூபாய் சிறப்பு தரிசன நுழைவுச் சீட்டு மூலம் 302 கோடி ரூபாயும் லட்டு பிரசாத விற்பனை மூலம் 400 கோடி ரூபாயும் வருவாய் கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

