உ.பி.யில் தவறை மூடி மறைக்க முயற்சி: எதிர்க்கட்சிகள் ஆவேசம்
உத்தரப் பிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. அப்பாவிக் குழந்தைகள் உயிரிழந்த மிகப்பெரும் தவறை மாநில பாஜக அரசு மூடி மறைக்கப் பார்ப்பதாக லக்னோவில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குற்றம்சாட்டினார். இந்த அலட்சிய சம்பவத்துக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சுகாதார அமைச்சர் மற்றும் அரசு மருத்துவனையின் தலைவர் ஆகியோர்தான் பொறுப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கோரக்பூர் அரசு மருத்துவமனையை பார்வையிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் என்று கூறினார். மாறாக, மருத்துவமனை டீனை பணியிடை நீக்கம் செய்திருப்பது வெறும் கண்துடைப்பு நடவடிக்கை என்றும் ஆசாத் விமர்சித்தார். இதற்கிடையே, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டீன் ராஜிவ் மிஸ்ரா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த சுகாதாரத் துறை அமைச்சர் சித்தார்த்நாத் சிங், ஆக்ஸிஜன் சிலிண்டருக்கான தொகையை செலுத்தத் தவறிய அவரது பொறுப்பற்ற செயல் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார்.
கோரக்பூர் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் உயிரிழந்ததற்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும் மாநில அரசை விமர்சித்துள்ளார். மருத்துவமனை டீனை மாநில அரசு பலிகடா ஆக்கிவிட்டதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் இறந்தது குறித்து விளக்கம் அளிக்குமாறு இந்திய மருத்துவ சங்கம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, கோரக்பூரில் குழந்தைகள் நோய் சிகிச்சைக்கான மண்டல மையம் 85 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். மேலும், அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் போதிய அளவில் இருப்பு வைக்கப்படுவதை உறுதிப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் நட்டா கூறியுள்ளார்.