“அஜித் தோவாலை விசாரணை செய்தால் புல்வாமா உண்மை தெரியவரும்”- ராஜ் தாக்கரே..!
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டால் புல்வாமா தாக்குதல் குறித்த அனைத்து உண்மைகளும் வெளிவரும் என ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ஆம் தேதி சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இந்நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டால் புல்வாமா தாக்குதல் குறித்த அனைத்து உண்மைகளும் வெளிவரும் என மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார். தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பிரதமர் மோடி, கார்பெட் தேசிய பூங்காவில் படப்பிடிப்பில் இருந்ததாக குறிப்பிட்ட அவர், செய்தி வெளியான பின்பும் கூட அவர் படப்பிடிப்பை தொடர்ந்ததாக தெரிவித்தார். மகாராஷ்டிரா மாநிலம் கோலாபூர் மாவட்டத்தில் ராஜ் தாக்கரே இதனை தெரிவித்தார்.