அபிநந்தனை விசாரித்தால்தான் உண்மை தெரியும் விமானி நசிகேதா
இந்திய விமானியான அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டார். பாகிஸ்தான் வசமுள்ள வீரர் அபிநந்தனை இந்தியாவிற்கு திரும்ப கொண்டுவர பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து இந்திய அரசும் பாகிஸ்தானிடம் வலியுறுத்தியது. நேற்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் இம்ரான் கான், நல்லெண்ண அடிப்படையில் எவ்வித நிபந்தனையுமின்றி அபிநந்தன் இன்று விடுவிக்கப்படுவார் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பை இந்தியர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர். அதன்படி இன்று அபிநந்தன் தாயகம் திரும்புகிறார்.
இந்நிலையில் அபிநந்தன் போலவே, கார்கில் போரின் போது பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்டு நாடு திரும்பிய விமானி நசிகேதா அவரது அபிநந்தன் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அபிநந்தன் நாடு திரும்பியதும் அவரிடம் விசாரித்தால் மட்டுமே உண்மை என்னவென்று தெரியவரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கூறியுள்ள அவர், எந்தச் சூழ்நிலையையும் சமாளிக்கும் அளவுக்கு எங்களுக்கு பயிற்சி கொடுக்கப்படுகிறது. அந்த பயிற்சி நிச்சயம் அபிநந்தனுக்கு உதவும். அது அவரை ஊக்கப்படுத்தும். அவர் நிச்சயம் வந்து இந்திய படையில் இணைவார். என்று தெரிவித்தார். தன்னை பாகிஸ்தான் ராணுவத்தினர் மரியாதையாக நடத்துவதாக அபிநந்தன் வெளியிட்ட வீடியோ குறித்த பேசிய நஜிகெடா, ஒரு போர் பதட்டமான நிலையில் எல்லைப்பகுதிக்குள் அபிநந்தன் சிக்கியுள்ளார்.
ஜெனிவா ஒப்பந்தம் படி சிறைபிடிக்கப்பட்ட வீரர்கள் மரியாதையாக நடத்தப்பட்டு, பாதுகாப்பாக திருப்பி அனுப்பி வைக்கப்பட வேண்டும். அதன்படி இது நடந்திருக்கும். ஆனால் அபிநந்தன் நாடு திரும்பியதும் அவரிடம் விசாரித்தால் மட்டுமே உண்மை என்னவென்று தெரியவரும். அபிநந்தன் வீரமும், விவேகமும் உள்ள வீரர். ஒரு விமானப்படை வீரருக்கான பண்பும், பண்பாடும் அவரிடம் உள்ளது. நாம் அவரை நினைத்து பெருமைப்பட வேண்டும். அவர் இந்திய மண்ணில் காலடி வைத்து மீண்டும் திரும்பும் தருணத்துக்காக இந்தியாவே காத்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
விமானி நசிகேதா 1999ம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டு 8 நாட்களுக்கு பிறகு இந்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டார்.