கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது
கர்நாடக சட்டப்பேரவையில் முதலமைச்சர் குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரிய நிலையில், வாக்கெடுப்பு தொடங்கியது.
கர்நாடகாவில் காங்கிரஸ், மஜத மற்றும் சுயேட்சைகள் உட்பட 16 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா கடிதம் கொடுத்தனர். இதனால் அங்கு அரசியல் பதற்றம் வெடித்தது. இதையடுத்து அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் கர்நாடக காங்கிரஸ் சிவக்குமார் முயற்சி செய்தார். ஆனால் ஒரு எம்.எல்.ஏ மட்டுமே ராஜினாமாவை திரும்பப் பெறும் நிலைக்கு வந்தார். பின்னர் அவரும் ராஜினாமா நிலைக்கே சென்றுவிட்டார். இதனால் காங்கிரஸின் முயற்சி தோற்றது.
இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஆளுநரிடம் கர்நாடக பாஜக கோரிக்கை வைத்தது. அத்துடன் தங்கள் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்றுகொள்ள உத்தரவிட வேண்டும் என எம்.எல்.ஏக்கள் உச்சநீதிமன்றம் சென்றனர். இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி கர்நாடக சட்டப்பேரவை தொடங்கியது. அதில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தயாராக இருப்பதாக குமாரசாமி தெரிவித்தார். இதற்கிடையே வழக்கு நடந்ததால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படாமல் இருந்தது. பின்னர் 18ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் நடைபெற்றது. ஆனால் வாக்குகெடுப்பு நடைபெறவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா இரவு முழுவதும் சட்டப்பேரவையிலேயே படுத்து உறங்கினார்.
இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பை வெள்ளிக்கிழமை மாலைக்குள் முடிக்க வேண்டும் என கர்நாடக ஆளுநர் வஜுபாய் லாலா கெடு விதித்தார். இதனை எதிர்த்து முதலமைச்சர் குமாரசாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனால் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்பார்த்து கர்நாடகா காத்திருந்தது. ஆனால் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாவதம் நான்காவது நாளாக இன்றும் நடைபெற்றது.
இதில் சித்தராமையா, துணை முதலமைச்சர் பரமேஸ்வர் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பேசினர். பின்னர் உருக்கமாக பேசிய முதலமைச்சர் குமாரசாமி, “நான் முதலமைச்சராக இருக்க காரணமான காங்கிரஸ் தலைவர்களுக்கு நன்றி. கர்நாடகாவில் உள்ள 6 கோடி மக்களிடம் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். தவறுகளை சரிசெய்யும் நேரம் இது. சட்டத்தில் விதி 10 குறித்தோ அல்லது வேறு சட்ட நுணுக்கம் குறித்தோ பேச விரும்பவில்லை. காங்கிரஸ் - மஜத ஆட்சி அமைந்த நாள் முதல் பாஜகவினர் குதிரை பேரத்தை தொடங்கிவிட்டனர். அரசியலுக்கு வர ஆசை இல்லை என்றாலும் காலத்தின் கட்டாயத்தினால் அரசியலுக்குள் நுழைந்தேன். தற்போது பதவியை விட்டுகொடுக்க தயார்” என்று தெரிவித்தார். இந்நிலையில் கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது.