“நியாயமற்ற வழக்கு… அவரை மன்னியுங்கள்” – நெதன்யாகுவுக்கு ஆதரவாக ட்ரம்ப் எழுதிய கடிதம்! யாருக்கு?
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் மீதான வழக்குகள் நியாயமற்றவை எனக் கூறி, அவருக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப், இஸ்ரேல் அதிபர் ஹெர்சாக்குக்கு கடிதம் எழுதியுள்ளார். நெதன்யாகு ஒரு வலிமையான தலைவராக இருந்து, இஸ்ரேலுக்கு சமாதானத்தை கொண்டு வந்தவர் எனவும், அவருக்கு ஆதரவாக ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீது 2019 ஆம் ஆண்டு 3 வழக்குகள் பதியப்பட்டன. குறிப்பாக 2லட்சத்து 11 ஆயிரத்து 832 டாலர் மதிப்பளவில் தொழிலதிபர்களிடம் லஞ்சம் பெற்றது உள்ளிட்ட 3 குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளன. நெதன்யாகு மீதான வழக்குகள் மீதான விசாரணை 2020 ஆம் ஆண்டு தொடங்கின. இந்த வழக்குகள் இன்னும் முடியாத நிலையில் தம் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள நெதன்யாகு, தாம் குற்றமற்றவர் என்று தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் நாட்டு விதிகளின்படி, அதிபரின் மன்னிப்பை எளிதில் பெற்றுவிட முடியாது. தம் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபட அதிபர் ஹெர்ஸாக்கின் மன்னிப்பை நெதன்யாகு பெற வேண்டுமானானால், அதிகாரமிக்க வலுவான நபரிடம் இருந்து கோரிக்கை விடுக்கப்பட வேண்டும். ஏற்கனவே ஜெருசலத்திற்குச்சென்றபோது, நாடாளுமன்றத்தில் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து அவருக்கு மன்னிப்பளிக்க வேண்டும் என்று அதிபரிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்நிலையில் முறைப்படி நெதன்யாகுவை மன்னிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இஸ்ரேல் அதிபருக்கு ட்ரம்ப் கடிதம் எழுதியுள்ளார் . இஸ்ரேல் சட்ட அமைப்பின் சுதந்திரத்தன்மையையும், அதன் தேவைகளையும் தாம் மதிப்பதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், கடினமாக காலத்தில் தன்னுடன் இணைந்து நீண்டகாலமாக போரை நடத்திக்கொண்டிருக்கும் பெஞ்சமின் நெதன்யாகு மீதான வழக்கு நியாயமற்றது என்று குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக்குக்கு எழுதிய கடிதத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக இஸ்ரேல் மக்கள் எதிர்கொண்ட கடினமான காலங்களைக் குறிப்பிட்ட ட்ரம்ப், நெதன்யாஹு ஒரு "வலிமை மிக்க மற்றும் தீர்க்கமான போர் நேரப் பிரதமராக" இருந்து, இப்போது இஸ்ரேலைச் சமாதானமான காலத்தை நோக்கி வழிநடத்தி வருவதாகக் கூறியுள்ளார். மத்திய கிழக்கு நாடுகளில் மேலும் பல நாடுகளைச் சமாதான உடன்படிக்கைகளில் சேர்க்க நெதன்யாஹுவுடன் இணைந்து பணியாற்றுவதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
பிணைக்கைதிகளைத் திரும்பக் கொண்டுவருவது மற்றும் அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் கவனம் செலுத்த இருவரும் ஒப்புக்கொண்டதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஹமாஸை கட்டுக்குள் வைத்திருப்பதில் முன்னோடியில்லாத வெற்றிகளை அடைந்துள்ள நிலையில், நெதன்யாஹுவை மன்னிப்பதன் மூலம் அவர் இஸ்ரேலை ஒன்றிணைத்து, சட்டரீதியிலான போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர இதுவே சரியான நேரம் என்றும் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

