இந்தியா வந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்திய மக்கள்தொகை குறித்தும், இந்தியாவிலுள்ள முஸ்லீம்களின் எண்ணிக்கை குறித்தும் தவறான தகவல்களை கூறியிருப்பது புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், டெல்லி ஹைதராபாத் இல்லத்தில் இருதரப்பு
பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், சீன மக்கள் தொகையை விட இந்திய மக்கள் தொகை அதிகம் என
குறிப்பிட்டு பேசினார். சீனாவின் மக்கள் தொகை 143 கோடி, இந்தியாவில் வெறும் 137 கோடி மக்கள் மட்டுமே வசிக்கின்றனர். இந்நிலையில் இந்திய
மக்கள்தொகை குறித்து தவறான கருத்துகளை பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல் இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில்தான் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதாக அதிபர் ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
அதாவது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கோடி 4 லட்சமாக இருந்த இஸ்லாமியர்களின் எண்ணிக்கை தற்போது 20 கோடியாக அதிகரித்துள்ளதாக ட்ரம்ப் சுட்டிக்காட்டியிருந்தார். இந்தியாவில் கடந்த 1951 ஆம் ஆண்டே 2 கோடியே 54 லட்சம் இஸ்லாமியர்கள் இருந்துள்ளனர். இந்தியாவில் 2 கோடிக்கும் குறைவாக இஸ்லாமியர்களே இருந்ததில்லை. இந்நிலையில் ட்ரம்ப் வெறும் ஒரு கோடி இஸ்லாமியர்கள்தான் முன்பு இருந்தனர் என குறிப்பிட்டது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியர்கள் குறித்தும், இஸ்லாமியர்கள் குறித்தும் தவறான தகவலை வழங்கியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.