தெலங்கானா: டிஆர்எஸ் கட்சியுடன் பிரசாந்த் கிஷோர் ஒப்பந்தம்

தெலங்கானா: டிஆர்எஸ் கட்சியுடன் பிரசாந்த் கிஷோர் ஒப்பந்தம்
தெலங்கானா: டிஆர்எஸ் கட்சியுடன் பிரசாந்த் கிஷோர் ஒப்பந்தம்

காங்கிரஸ் கட்சியுடன் பலமுறை ஆலோசனை நடத்திவரும் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், தெலங்கானாவில் ஆளும் TRS கட்சியுடன் ஒப்பந்தம் செய்துள்ளது அரசியல் களத்தில் வியப்புடன் பார்க்கப்படுகிறது.

பிரஷாந்த் கிஷோர் வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெறுவதற்கான செயல்திட்டத்தை அக்கட்சியிடம் வழங்கியுள்ளார். மேலும் அக்கட்சியிலும் இணைய உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தெலங்கானாவில் காங்கிரசுக்கு எதிர்த்தரப்பில் இருக்கும் ஆளும் டிஆர்எஸ் கட்சியுடன் பிரஷாந்த் கிஷோர் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார்.

இதன்படி அடுத்தாண்டில் நடைபெறும் தெலங்கானா பேரவை தேர்தலில் டிஆர்எஸ் கட்சி வெல்வதற்கான ஆலோசனைகளை பிரஷாந்த் கிஷோர் வழங்க உள்ளார். இது தொடர்பான ஒப்பந்தம் பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்திற்கும் டிஆர்எஸ் கட்சிக்கும் இடையே ஹைதராபாத்தில் கையெழுத்தானது. எனினும் டிஆர்எஸ் கட்சிக்கான வெற்றி வியூகங்களை பிரஷாந்த் கிஷோர் நேரடியாக வழங்க மாட்டார் என்றும், அவரது ஐபேக் நிறுவனம்தான் வழங்கும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே தெலங்கானா காங்கிரஸ் பொறுப்பாளராக இருக்கக்கூடிய மாணிக்கம் தாகூர் ட்விட்டரில் ஒரு பதிவை இட்டுள்ளார். எதிரிக்கு நண்பனாக இருக்கக்கூடியவரை ஒருபோதும் நம்பக்கூடாது என்றும், தான் சொல்வது சரிதானா? என்றும் அதில் மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் பிரஷாந்த் கிஷோர் காங்கிரசில் இணைவதற்கு அக்கட்சிக்குள் அதிருப்தி இருக்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. காங்கிரசிற்கு எதிர்த்தரப்பில் உள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியுடனும் பிரஷாந்த் கிஷோரின் நிறுவனம் இணைந்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com