திரிபுரா விவகாரம்: தேர்தலை சுமூகமாக நடத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? உச்ச நீதிமன்றம்
திரிபுரா மாநிலத்தில் வரும் 25ஆம் தேதி நடைபெற உள்ள முனிசிபல் அமைப்புகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை சுமூகமாக நடத்த என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
வரும் நவம்பர் 25ஆம் தேதி திரிபுரா மாநிலத்தில் முனிசிபல் அமைப்புகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் வன்முறை அரங்கேறி வருகிறது. நேற்றைய அகர்தலா மாவட்டத்தில் அரசியல் கட்சிகளுக்கு இடையே நடைபெற்ற மோதலில் ஏராளமானோர் படுகாயம் அடைந்திருந்தனர்.
இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி திரிபுரா மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு என்பது முழுமையாக சீர்கெட்டுப் போய் இருக்கிறது. எனவே, இதுகுறித்து உடனடியாக உச்ச நீதிமன்றம் தலையிட்டு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தது.
அதேபோல் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தங்கள் கட்சியினர் மீது பொய் வழக்குகளை போட்டு தேர்தலை நேர்மை இல்லாத வகையில் நடத்துவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருவதாகவும் மனுவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது தேர்தலை சுமூகமாக நடத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு மாநில தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் தேர்தல் வன்முறை இல்லாமல் நடத்த கூடுதலான பாதுகாப்பு மேற்கொள்ளவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
ஏற்கனவே இது தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் திரிபுரா மாநிலத்தில் வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர அம்மாநில காவல்துறை தலைவர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு அறிவுறுத்தல் வழங்கியிருக்கிறது.