முத்தலாக் விவகாரம்: நாடாளுமன்றத்தில் இன்று விவாதம்
இஸ்லாமிய ஆண்கள் மும்முறை தலாக் கூறி விவாகரத்து பெறும் நடைமுறை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும் சட்ட மசோதா மீது நாடாளுமன்ற மக்களவையில் இன்று விவாதம் நடைபெறவுள்ளது.
கடந்த வாரம் இந்த மசோதா விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த நிலையில் இதன் மீதான விவாதத்தை இந்த வாரத்திற்கு ஒத்தி வைக்கும்படி மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகர்ஜுன கார்கே வலியுறுத்தினார். இன்றைய தினம் விவாதத்தில் பங்கெடுப்பதாக காங்கிரஸ் அளித்த உறுதியை அடுத்து மசோதா இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இன்றைய அவை நடவடிக்கையில் கட்டாயம் கலந்துகொள்ளவேண்டும் என பாரதிய ஜனதா எம்பிக்களுக்கு அக்கட்சியின் கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முத்தலாக் முறையை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும் அவசரச் சட்டத்திற்கு மாற்றாக கொண்டுவரப்பட்டுள்ள இம்மசோதா கடந்த 17ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. புதிய மசோதாவின்படி முத்தாலக் முறை சட்டவிரோதமானது. அவ்வாறு உடனடி விவாகரத்து செய்யும் ஆண்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. முன்னதாக மத்திய அரசு கொண்டுவந்த சட்டம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மாநிலங்களவையில் கடும் எதிர்ப்பு காரணமாக அப்படியே நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் இந்த மசோதாவிற்கு பதிலாக மத்திய அரசு ஒரு அவசர சட்டத்தை இயற்றியது. விதிமுறைகளின்படி ஒரு அவசரச் சட்டம் இயற்றப்பட்டால், நாடாளுமன்றம் கூடிய 42 நாட்களுக்குள் அதன் ஒப்புதலைப் பெற வேண்டும்.