“முத்தலாக் வழக்கத்தால் பெண்கள் நடுத்தெருவில் நிற்ககூடாது” - ரவிசங்கர் பிரசாத்

“முத்தலாக் வழக்கத்தால் பெண்கள் நடுத்தெருவில் நிற்ககூடாது” - ரவிசங்கர் பிரசாத்

“முத்தலாக் வழக்கத்தால் பெண்கள் நடுத்தெருவில் நிற்ககூடாது” - ரவிசங்கர் பிரசாத்
Published on

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே மாநிலங்களவையில் முத்தலாக் தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முத்தலாக் மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவையில் தாக்கல் செய்து பேசினார். திருமணமான இஸ்லாமியப் பெண்களின் உரிமையைப் பாதுகாக்கும் ஒரே நோக்கில் மசோதா கொண்டு வரப்படுவதாக அவர் கூறினார். இந்த மசோதாவை அரசியல் ரீதியாகவும், வாக்கு வங்கி அரசியலாகவும் பார்க்கக்கூடாது என்று அவர் பேசினார்.

இந்த மசோதா மனிதநேயம், மகளிரின் கவுரவத்துடன் தொடர்புடையது என்ற ரவிசங்கர் பிரசாத், ஆண் -பெண் பாகுபாட்டை நீக்கவும் மசோதா உதவும் என்று தெரிவித்தார். இந்தியப் பெண்கள் இப்போது எல்லா துறைகளிலும் சாதனை படைத்து வருவதாகக் கூறிய அமைச்சர், முத்தலாக் போன்ற வழக்கங்களால் பெண்கள் நடுத்தெருவில் விடப்படக் கூடாது என்றும் தெரிவித்தார். உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படியே முத்தலாக் தடை மசோதாவை அரசு கொண்டு வருவதாகவும் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் 574 முத்தலாக் சம்பவங்கள் கவனத்துக்கு வந்ததாகவும், அரசு அவசர சட்டம் பிறப்பித்த பிறகும்கூட 101 முத்தலாக் புகார்கள் வெளியானதாகவும் குறிப்பிட்டார். இஸ்லாமிய நாடுகள் பெரும்பாலானவற்றில் தடை செய்யப்பட்டுள்ள ஒரு வழக்கத்தை, இந்தியா போன்ற மதச்சார்பற்ற நாட்டில் பலர் எதிர்ப்பது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து இந்த மசோதா மீது 4 மணி நேர விவாதத்துக்கு மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு அனுமதி அளித்தார். முத்தலாக் வழக்கத்தை கிரிமினல் குற்றமாகவும், ஜாமீனில் விடமுடியாததாகவும் கருதும் மசோதாவின் அம்சங்களுக்கு காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி மற்றும் இடதுசாரி கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மசோதாவை ஆய்வுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வலியுறுத்தி அவர்கள் முழக்கமிட்டனர்.

மக்களவையில் முத்தலாக் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத அதிமுக, மாநிலங்களவையில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மசோதாவை எதிர்த்து வாக்களிக்கப் போவதாக பாரதிய ‌ஜனதாவின் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளமும் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com