“இஸ்லாமிய மதத்தில் மட்டும் ஏன் தலையிட வேண்டும்?” - முத்தலாக் விவாதம்
இஸ்லாமிய நாடுகளில் இருக்கு போது, இந்தியாவில் ஏன் முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிக்க கூடாது? என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருத்தங்களுடன் கூடிய முத்தலாக் தடை மசோதா மக்களவை இன்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மசோதாவை தாக்கல் செய்து பேசினார். அப்போது, “முத்தலாக் தடை மசோதா மதம், சமூகம், நம்பிக்கைக்கு எதிரானதல்ல. முஸ்லிம் பெண்களின் உரிமைகளை பாதுகாக்கவே மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. பெண்களின் முன்னேற்றம், சுயமரியாதைக்காகவே இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. 20 இஸ்லாமிய நாடுகள் முத்தலாக்கிற்கு தடை விதித்த நிலையில், மதச்சார்பற்ற இந்தியா ஏன் தடை கூடாது?” என்று ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பினார்.
இதனிடையே, முத்தலாக் தடை மசோதாவை நாடாளுமன்ற சிறப்பு குழுவுக்கு அனுப்ப எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தனர். தற்போதைய நிலையில் மசோதாவை நிறைவேற்ற காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மக்களவையில் பேசிய கேரளாவைச் சேர்ந்த புரட்சிகர சோஷியலிஸ்ட் கட்சி எம்.பி பிரேமசந்திரன், சிவில் விவகாரத்தை குற்றமாக மாற்றி தண்டனை விதிக்கக் கூடாது என மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இந்து, கிறிஸ்தவ மதச் சட்டங்களில் அரசு தலையிடாமல் இருக்கும் போது இஸ்லாமிய மதத்தில் மட்டும் ஏன் தலையிட வேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.