வேறு கட்சிகளுக்கு செல்பவர்கள் போகலாம்; நான் கட்சியை புதிதாகக் கட்டமைப்பேன் - மம்தா பானர்ஜி
2026 மேற்கு வங்க தேர்தலில் மாநிலத்திலுள்ள மொத்தம் 294 சட்டமன்றத் தொகுதிகளில், திரிணமூல் காங்கிரஸ் 80 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது. பல முக்கியத் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் உட்பட 211 வேட்பாளர்கள் தோல்வியடைந்தனர். நீண்ட காலமாகத் தனது அரசியல் கோட்டையாகக் கருதப்பட்டு வந்த பவானிப்பூர் தொகுதியிலேயே, மம்தா பானர்ஜி தோல்வியைச் சந்தித்தார்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட மறுநாள் மே 5-ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய மம்தா பானர்ஜி, சில தலைவர்கள் அணி மாறக்கூடும் என்பது தனக்குத் தெரியும் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், அவர்களுக்குச் சில நிர்ப்பந்தங்கள் இருக்கலாம். அது குறித்து நான் சொல்வதற்கு ஏதுமில்லை. யார் வேண்டுமானாலும் செல்லலாம். யாரையும் கட்டாயப்படுத்தித் தடுத்து நிறுத்துவதில் எனக்கு நம்பிக்கையில்லை என்று அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் தனது காளிகாட் இல்லத்தில், திரிணாமூல் காங்கிரஸின் போட்டியிட்ட வேட்பாளர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்தித்த போதிலும் கட்சி மீண்டும் எழுச்சி பெறும் என்று கூறினார்.
மற்ற கட்சிகளுக்குச் செல்பவர்கள் செல்லட்டும். நான் கட்சியைப் புதிதாகக் கட்டியெழுப்புவேன். கட்சியில் இருப்பவர்களிடம் நான் கூறுவது என்னவென்றால், சேதமடைந்த கட்சி அலுவலகங்களைக் கட்டி எழுப்பி வண்ணம் பூசி மீண்டும் திறக்கவும்; தேவைப்பட்டால் நானும் வண்ணம் பூசுவேன். திரிணாமூல் காங்கிரஸ் ஒருபோதும் தலைகுனியாது என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

