பெகாசஸ் மென்பொருளை வாங்கியதா மத்திய அரசு - மீண்டும் பூதாகரமாகும் பெகாசஸ் உளவு விவகாரம்

பெகாசஸ் மென்பொருளை வாங்கியதா மத்திய அரசு - மீண்டும் பூதாகரமாகும் பெகாசஸ் உளவு விவகாரம்
பெகாசஸ் மென்பொருளை வாங்கியதா மத்திய அரசு - மீண்டும் பூதாகரமாகும் பெகாசஸ் உளவு விவகாரம்

பெகாசஸ் உளவு மென்பொருளை இஸ்ரேலிடம் இருந்து மத்திய அரசு வாங்கியதாக நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி விவாத பொருளாகியுள்ளது.

பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் பல்வேறு நாடுகளை சேர்ந்த, அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், நீதிபதிகள் மற்றும் பிரபலங்கள் உளவு பார்க்கப்பட்டதாக கடந்த ஆண்டு வெளியான செய்தி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தியாவை சேர்ந்த அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்களின் பெயர்களும் இதில் இடம் பெற்றிருந்ததால் இந்தியாவிலும் இவ்விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி நாடாளுமன்றத்தை முடக்கின. இந்த குற்றச்சாட்டில் உண்மையில்லை என மத்திய அரசு நிராகரித்தது. பெகாசஸ் மென்பொருளை தயாரித்த என்.எஸ்.ஓ நிறுவனத்திடம் எந்த தொடர்பும் வைத்து கொள்ளவில்லை என பாதுகாப்பு துறை அமைச்சகம் விளக்கம் அளித்தது.

இந்த விவகாரம் உச்சநீதிமன்றம் வரை சென்றது. இது குறித்து விசாரிக்க கடந்த அக்டோபரில் தனி விசாரணைக் குழுவையும் உச்சநீதிமன்றம் அமைத்தது. இந்நிலையில் தி நியூயார்க் டைம்ஸ் இதழால் பெகாசஸ் விவகாரம் மீண்டும் பூதாகரமாகியுள்ளது. உலகின் அதிசக்தி வாய்ந்த சைபர் ஆயுதத்துக்கான போர் என்ற தலைப்பில் தி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், 2017ஆம் ஆண்டு பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்தின் போது, கையெழுத்தான ஒப்பந்தத்தில், பெகாசஸ் மற்றும் ஏவுகணை மையப்புள்ளியாக இருந்தது என குறிப்பிட்டுள்ளது.

இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, மோடி அரசு அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களை உளவு பார்க்க பெகாசஸ் மென்பொருளை வாங்கி இருப்பதாகவும், மோடி அரசு தேசத்துரோகம் செய்துவிட்டது என கூறியுள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க இருக்கும் நிலையில், பெகாசஸ் விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் மீண்டும் பிரச்னையை எழுப்ப திட்டமிட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com