நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

தேசிய அளவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பது குறித்து இந்தக் கட்டுரையில் காண்போம்.

நோய்களைக் குணப்படுத்துவதில் மருத்துவம் சிறந்து விளங்குகிறது. மருத்துவத்தில் பல வகைகள் இருந்தாலும், தற்காலத்தில் முதன்மையாக இருப்பது ஆங்கில மருத்துவமே. இந்த ஆங்கில மருத்துவத்தின் வழியில் இந்தியாவில் பல மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. அந்த வகையில் தேசிய அளவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை எவ்வளவு மற்றும் எத்தனை மருத்துவக் கல்வி இடங்கள் இருக்கின்றன என்பது குறித்து இந்தக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

இந்தியாவில் மொத்தம் 650 மருத்துவக் கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. இவற்றில் 99,163 மருத்துவக் கல்வி இடங்கள் இருக்கின்றன. தேசிய மருத்துவ ஆணையம், கடந்த ஜனவரி வரை அளித்த புள்ளிவிவரங்களின்படி, நாட்டிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. அதாவது, 71 மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன.

Education
EducationEducation

கேரளாவில் 33, புதுச்சேரியில் 9, கர்நாடகத்தில் 67, ஆந்திராவில் 32, தெலங்கானாவில் 42, மகாராஷ்டிராவில் 63 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. மத்திய பிரதேசத்தில் 25, குஜராத்தில் 36, உத்தரப் பிரதேசத்தில் 67, தலைநகர் டெல்லியில் 10 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. பீகாரில் 20, மேற்கு வங்கத்தில் 32 மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. சண்டிகர், சிக்கிம், மேகாலயா, மிசோரம், அருணாச்சல் பிரதேசம், கோவா, டாமன்-டையு, அந்தமான் நிகோபாரில் தலா ஒரு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. நாகலாந்து, லடாக், லட்சத்தீவுகளில் ஒரு மருத்துவக் கல்லூரிகூட இல்லை.

நாட்டில் உள்ள டாப் 5 மருத்துவக் கல்லூரிகளைப் பட்டியலிட்டால், அதிலும் தமிழ்நாடுதான் முதல் இடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டின் 71 மருத்துவக் கல்லூரிகளில் தலா 153 இடங்கள் என்ற அளவில், 11,000-க்கும் அதிக மருத்துவக் கல்வி இடங்கள் இருக்கின்றன. அடுத்த இடத்தில் உள்ள கர்நாடகத்தில் 67 மருத்துவக் கல்லூரிகளில் 10,945 இடங்கள் உள்ளன.

உத்தரப் பிரதேசத்தில் 67 மருத்துவக் கல்லூரிகளில் 9,153 இடங்களும், மகாராஷ்டிராவின் 63 மருத்துவக் கல்லூரிகளில் 10,045 இடங்களும், தெலங்கானாவின் 42 மருத்துவக் கல்லூரிகளில் 6,690 இடங்களும் உள்ளன.

மேலும், தேசிய அளவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை குறித்து இச்செய்தியின் தொடக்கத்தில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் இன்னும் விரிவாகப் பார்க்கலாம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com