கேரளாவில் மிரட்டும் கனமழை: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு
கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழையின் தீவிரம் அடைந்துள்ளது. எப்போதும் இல்லாத அளவுக்கு மழை கொட்டித் தீர்த்து வருவதால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. குறிப்பாக இடுக்கி, கோழிக்கோடு, மலப்புரம், வயநாடு, கொல்லம் மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் மண்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனால் பல வீடுகள் சரிந்து விழுந்துள்ளன. சாலைகள் துண்டானதால் பொதுமக்கள் வெளியே எங்கும் செல்ல முடியாமல் உள்ளனர். கொச்சி விமான நிலையமும் மூடப்பட்டுள்ளது.
கனமழை மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. பலர் காணாமல் போயுள்ளனர். உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதனிடையே மத்திய அரசு ராணுவத்தினரை அங்கு அனுப்பியுள்ளது. அவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த மழை வெள்ளத்தில் இடுக்கி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளா மாநிலத்திற்கு தற்போது செல்வதை தவிர்க்குமாறு அமெரிக்கா தன் நாட்டு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.