அசாமில் விஷச் சாராயம் குடித்து பலியானவர்கள் எண்ணிக்கை 114 ஆக உயர்வு!
அசாமில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 114 ஆக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக 10 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
அசாம் மாநிலம் கோலகாட் மாவட்டத்தின் ஜோர்ஹட் பகுதியிலுள்ள டீ தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் கூட்டாக நாட்டு சாராயம் குடித்துள்ளனர். ரூ.10, ரூ.20-க்கு விற்கப்பட்ட அந்தச் சாராயத்தில் நச்சுத்தன்மை அதிகம் இருந்துள்ளது. அதனால், அதைக் குடித்த தொழிலாளர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
நேற்று முன் தினம் வரை 30 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், இதில் உயிரிழந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 114 ஆக உயர்ந்துள்ளது. சிலருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த சம்பவம் அசாம் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சோக சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள அசாம் அரசு உடனடியாக உத்தரவிட்டுள்ளது. அத்தோடு, டிஜிபி, தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் சோனோவால் அவசர ஆலோசனை நடத்தினார். இந்தச் சம்பவம் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.