தலைப்புச் செய்திகள் | விவசாயிகள் போராட்டம் டூ அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த செந்தில் பாலாஜி!
மத்திய அமைச்சர்களுடன் விவசாயிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் பேரணியாக சென்று தலைநகர் டெல்லியை இன்று முற்றுகையிட திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
விவசாயிகளின் போராட்டம் எதிரொலியாக டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எல்லைகளில் தடுப்பு வேலிகளை அமைத்து கண்காணிக்கும் பணிகளில் காவல்துறையினர் இறங்கியுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவையில் நடந்தது என்ன என்பது குறித்து ஆளுநர் ஆர்.என். ரவி விளக்க அறிக்கை. இதில் சபாநாயகர் பதவிக்கான மரியாதையை அப்பாவு குறைத்துவிட்டார் என்றும் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார் ஆளுநர்.
ஆளுநர் புறக்கணித்த உரையை சட்டப்பேரவையில் வாசித்தார் சபாநாயகர் அப்பாவு. குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த அனுமதிக்க முடியாது என ஆளுநர் உரையில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் உரையில் தமிழக அரசு பொய்களை சேர்த்துள்ளதாக அண்ணாமலை குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முன்னோடி மாநிலம் என்பது தவறான தகவல் என்றும் விமர்சித்துள்ளார்.
எதிர்க்கட்சித் துணைத்தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் மரபுகளை கடைபிடிக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.
நாடாளுமன்ற தேர்தலில் மூன்று தனித்தொகுதிகள் உட்பட 4 தொகுதிகள் கேட்டிருக்கிறோம் என்று திமுகவுடனான தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை குறித்து திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார்.
திமுக கூட்டணியிடம் ராமநாதபுரம் தொகுதியையும், ஒரு ராஜ்யசபா தொகுதியையும் கேட்டிருப்பதாக காதர் மொய்தீன் பேட்டி.
மக்கள் மத்தியில் அன்று எம்ஜிஆருக்கு இருந்த வரவேற்பு இன்று உதயநிதிக்கு இருக்கிறது என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேட்டி.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 8 மாதங்களாக புழல் சிறையில் இருக்கும் நிலையில், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி.
வேங்கைவயல் விவகாரத்தில் 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம். சிபிசிஐடி விசாரணைக்காக புதிய அதிகாரி நியமனமிக்கப்பட்டுள்ளார்.
வந்தவாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சுகாதார வளாகங்களில் கள ஆய்வு நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் அருகே அரசுப் பள்ளியில் அரணை விழுந்த மதிய உணவை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் தலைமை ஆசிரியரை கண்டித்து பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சென்னையில் கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 280 கோடி ரூபாயை மதுபான தொழிலில் முதலீடு செய்தது அம்பலமாகியுள்ளது.
பஞ்சமி நில விவகாரத்தில் முரசொலி அறக்கட்டளைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையில் தண்டவாளத்தில் கற்களை வைத்து ரயிலை கவிழ்க்க முயற்சித்த வடமாநிலத்தை சேர்ந்த 3 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இமாச்சலில் மாயமான சைதை துரைசாமி மகனின் உடல் 9 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல். மேலும் உடலைக் கண்டுபிடித்த நீச்சல் வீரர்களுக்கு ஒரு கோடி ரூபாய் சன்மானம்.
இலங்கை மற்றும் மொரீஷியஸில் யுபிஐ பரிவர்த்தனை சேவையை காணொலியில் தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.
மாநிலங்களவை வேட்பாளர் பட்டியல் தொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் ஆலோசனை. மக்களவை தேர்தலில் ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தியை களம் இறக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
மாசி மாத பிறப்பையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படவுள்ளது. ஆன்லைனில் முன்பதிவு செய்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் வாக்கு யாருக்கு? புதிய தலைமுறை, தி பெடரல் இணையதளத்திற்காக நாடு முழுவதும் நடத்தப்பட்ட மெகா கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வை மையப்படுத்தி வாக்களிக்கப்போவதாக 63 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது பீகார் அரசு. பாஜக ஆதரவுடன் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் ஆட்சி தொடர்கிறது.
சீனாவில் களைகட்டும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பார்வையாளர்களை கவர்ந்த டிரோன் கண்காட்சி மற்றும் இரவை பகலாக்கிய வாணவேடிக்கைகள்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய வீரர் கே.எல்.ராகுல் விலகல். தேவ்தத் படிக்கல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.