இந்தியா
இன்று ஓணம் பண்டிகை: வீட்டில் பூக்கோலமிட்டு கோலாகல கொண்டாட்டம்!
இன்று ஓணம் பண்டிகை: வீட்டில் பூக்கோலமிட்டு கோலாகல கொண்டாட்டம்!
ஒணம் பண்டிகையை வரவேற்கும் விதத்தில் பூக்கோலம் வரைந்து வீட்டை அலங்கரித்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத் திருநாள் அன்று மகாபலி சக்கரவர்த்தி தன்னுடைய நாட்டையும், நாட்டு மக்களையும் பார்ப்பதற்காக வருகிறார். அவரை வரவேற்கும் விதமாகவே கேரள மக்கள் 10 நாட்கள் திருவிழாவாக ஓணம் பண்டிகையை கொண்டாடி மகிழ்வர்.
சாதி, மத. பேதமின்றி கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து மலையாள மொழி பேசிடும் மக்களால் ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக உலகம் முழுவதிலும் உள்ள மலையாள மக்கள் ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்காக விடுமுறை எடுத்துக் கொண்டு தங்களது சொந்த மண்ணுக்கு திரும்பி வந்து சொந்தங்களுடன் இணைந்து பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.
இந்த ஆண்டு கொரோனா பாதிப்புகளால் ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் சற்று தீவிரமடையவில்லை என்றாலும் கேரள மக்கள் தங்கள் வீடுகளில் பலவண்ணங்களில் அத்தப்பூ கோலமிட்டு அலங்கரித்துள்ளனர்.
புத்தாடைகளை அணிந்தும், பட்டாசுகளை வெடித்தும், விதவிதமான உணவு பதார்த்தங்களை சமைத்து விருந்துண்டும் கொண்டாடி வருகின்றனர். ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஒருவருக்கொருவர் ஓணம் வாழ்த்து செய்திகளையும் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழில் முதல் மாதமான சித்திரை போல, சிங்கமாதம் என்னும் ஆவணியே மலையாளத்தின் முதல் மாதம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், இதை புத்தாண்டு விழாவாகவும் கொண்டாடுகின்றனர்.