''எழுத்தாளர், சிந்தனையாளர், அறிவியல் விஞ்ஞானி..'' - அப்துல்கலாமின் நினைவு தினம் இன்று!
“கனவு காணுங்கள்... கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல. உன்னை தூங்கவிடாமல் பண்ணுவது எதுவோ அதுவே கனவு” என்ற பொன்மொழிகளால் இளைஞர்களின் தூக்கத்தை கலைத்தவர். “அழகை பற்றி கனவு காணாதீர்கள், அது உங்கள் கடமையை பாழாக்கிவிடும். கடமையை பற்றி கனவு காணுங்கள், அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்” எனக்கூறி எழுச்சியை உண்டாக்கியவர்.
தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து நாட்டின் மிக உயரிய பொறுப்பான குடியரசுத் தலைவர் என்ற அரியணையில் அமர்ந்தவர். அத்தோடு மக்களின் குடியரசுத் தலைவர் என்று சொல்லும் அளவிற்கு அவரின் செயல்பாடுகள் எப்போதும் மக்களை பெரிய அளவில் பேச வைத்தன.
எழுத்தாளர், சிந்தனையாளர், அறிவியல் விஞ்ஞானி என அவர் ஜொலிக்காத இடங்களே இல்லை.. அறிவில், அறிவியலில் யாரும் எட்டமுடியாத உயரத்தில் அவர் இருந்தாலும் எல்லோரிடமும் எளிமையாக அன்பாக பழகக்கூடியவர். குறிப்பாக குழந்தைகள் மீது தனிப்பிரியம் வைத்திருந்தார். அவர்களை சந்தித்து உரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். குழந்தைகளும் அப்துல் கலாமை அதிகம் நேசித்தார்கள்.
அப்துல்கலாம் சொன்ன ஒவ்வொரு வாக்கியமும் இன்றைய இளைஞர்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுக்கிறது. ‘முயற்சிகள் தவறலாம்.. ஆனால் முயற்சிக்க தவறாதே’.. ‘ ஒரு முறை வந்தால் கனவு.. இருமுறை வந்தால் அது ஆசை.. பலமுறை வந்தால் அது லட்சியம்’ ‘நாளைய இந்தியா இளைஞர்கள் கையில்’ போன்ற பொன்மொழிகள் இந்தியாவை இளைஞர்கள் தூக்கி நிறுத்த வேண்டும் என்ற கொள்கையில் இறுதிவரை உறுதியாக நின்றவர்.
2020 ஆம் ஆண்டு இந்தியா வல்லரசாக வேண்டும் என அவருக்கே உரிய பாணியில் கனவு கண்டவர். அவருடைய இந்தியா 2020 என்ற நூலில் கலாம், இந்தியா அறிவிலே வல்லரசு நாடாகவும், வளர்ந்த நாடாகவும், 2020 ஆம் ஆண்டிற்குள் மாறுவதற்குரிய வரை திட்டத்தை அறிவித்திருந்தார். ஆனால் 2020 ஆம் ஆண்டு வந்தாலும் அவரது கனவு கனவாகவே மாறிப்போய் உள்ளது என்றால் அது மிகையல்ல.
அப்படிப்பட்ட ஏவுகணை நாயகன், இளைஞர்களின் விடிவெள்ளி, இந்தியர்களின் கலங்கரை விளக்கம், தன்னம்பிக்கை நாயகன் என பல பெயர்களுக்கு சொந்தக்காரர் அப்துல்கலாம் தனது 83-வது வயதில் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி உயிரிழந்தார்.
அவர் இம்மண்னை விட்டு மறைந்தாலும் அவரின் புகழ் இம்மண்ணை விட்டு மறையப்போவதில்லை. என்றென்றும் நிலைத்திருக்கும் அவரது நினைவுகளை நினைவு தினமான இன்று போற்றுவோம்.