கொரோனா விரைவுச் செய்திகள் ஏப்ரல் 25: நீதிமன்ற விசாரணை முதல் அனைத்துக் கட்சி கூட்டம் வரை

கொரோனா விரைவுச் செய்திகள் ஏப்ரல் 25: நீதிமன்ற விசாரணை முதல் அனைத்துக் கட்சி கூட்டம் வரை
கொரோனா விரைவுச் செய்திகள் ஏப்ரல் 25: நீதிமன்ற விசாரணை முதல் அனைத்துக் கட்சி கூட்டம் வரை

> தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு அனுமதி கோரும் வழக்கில் உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். காலை 9.15 மணிக்கு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டம் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி கோரும் வேதாந்தாவின் வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை முக்கிய விசாரணை நடத்தவுள்ளது. அப்போது, தமிழகத்தின் தரப்பில் முன்வைக்க வேண்டிய வாதங்கள் தொடர்பாக கட்சித் தலைவர்களிடம் கருத்து கேட்கப்படும் எனவும் அதன்பிறகு தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யவதற்காக அரசே ஆலையை ஏற்று நடத்தலாம் என உச்சநீதிமன்றம் யோசனை கூறியிருந்த நிலையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் பங்கேற்கவுள்ளதாக அறிவித்துள்ளன.

>திரவ ஆக்சிஜனை மருத்துவத் தேவைக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. கொரோனா இரண்டாவது அலையின் பரவல் அதிகரித்து, ஆக்சிஜன் உதவி தேவைப்படும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் திரவ ஆக்சிஜனை மருத்துவம் தவிர வேறு பயன்பாட்டுக்கு உபயோகிக்க வேண்டாம் என உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. மற்ற பயன்பாடுகளைத் தவிர்ப்பதன் மூலம் மருத்துவ தேவைக்கு ஆக்சிஜன் உற்பத்தி அதிகரிக்கும் என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

>ஒரேநாளில் சிகிச்சை பலனின்றி 82 பேர் உயிரிழப்பு தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல், தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 15 ஆயிரத்து 659 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மொத்தம் 10 லட்சத்து 81ஆயிரத்து 988 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் ஆறுதல் அளிக்கும் வகையில், ஒரேநாளில் 11 ஆயிரத்து 65 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். மாநிலம் முழுவதும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 5ஆயிரத்து 180 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 9 லட்சத்து 63 ஆயிரத்து 251 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 82 பேர் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆயிரத்து 557 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 12 வயதுக்கு உட்பட்ட 587 சிறார்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் ஒரே நாளில் 4 ஆயிரத்து 206 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி பாதிப்பை விட குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை அதிகமானது. அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆயிரத்து 242 பேரும், கோவை மாவட்டத்தில் ஆயிரத்து 38 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 885 பேரும், மதுரை மாவட்டத்தில் 603 பேரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 558 பேரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். சென்னையில், பிறந்து 19 நாட்களான பச்சிளம் பெண் குழந்தை கொரோனாவால் உயிரிழந்தது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த இணை நோய் இல்லாத, ராமநாதபுரத்தை சேர்ந்த 33 வயது இளைஞர் உள்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

>கொரோனா நோயாளி சிகிச்சை பெற்று வந்த வார்டு, அவரது மணவிழாவுக்காக திருமணக் கூடமாக மாறிய விந்தையான நிகழ்வு கேரளாவில் அரங்கேறியுள்ளது. ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த சரத் மோன் என்ற இளைஞரும் அவரது தாயாரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, வந்தனம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சரத் மோனுக்கு இன்று திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு கொரோனா தாக்கியதால் குடும்பத்தினர் சற்று கலங்கினர். ஆனாலும், திட்டமிட்டபடி திருமணத்தை நடத்துவது என்று சரத் மோனின் குடும்பத்தினரும் மணப்பெண்ணான அபிராமியின் வீட்டாரும் முடிவு செய்தனர். சரத் மோன் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையின் வார்டிலேயே திருமணத்தை நடத்த மாவட்ட ஆட்சியரிடமும், சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகத்திடம் அனுமதி பெறப்பட்டது. பின்னர் மணப்பெண் அபிராமி, கொரோனா கவச உடைகளை அணிந்தபடி உறவினர் ஒருவருடன் மருத்துவமனைக்கு வந்தார். மருத்துவர்களும் இதரப் பணியாளர்களும் சாட்சியாக இருக்க சரத் மோனும் அபிராமியும் மாலை மாற்றிக்கொண்டனர். இருவரது திருமணமும் ஓராண்டுக்கு முன்னரே நிச்சயிக்கப்பட்டுவிட்டதாகவும், கொரோனா பரவலால் தள்ளிவைக்கப்பட்டதாகவும் அவர்களது குடும்பத்தினர் தெரிவித்தனர். சரத் மோன் - அபிராமி திருமணப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

>ஏர்வாடி தர்காவில் வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட மனநலம் குன்றியவர்கள் தங்கி வருகின்றனர். இவர்களுக்கு, தர்காவுக்கு வரும் பொதுமக்கள் உணவு, தண்ணீர் உள்ளிட்டவற்றை அன்னதானமாக வழங்குவர். முழு ஊரடங்கு காரணமாக, ஏர்வாடி தர்காவுக்கு பொதுமக்கள் வந்து செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் உணவு கிடைக்காமல் மனநலம் குன்றிய 300க்கும் மேற்பட்டவர்கள் சிரமப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மனநலம் குன்றியவர்களுக்கு போதிய உணவுகள் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தர்கா தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை தொடர்பு கொண்டு கேட்ட போது, தர்காவில் உள்ளவர்களுக்கும், வெளியே சுற்றித்திரிகின்ற மனநலம் குன்றியவர்களுக்கும் உணவு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

>இந்தியா கொரோனா பேரிடரை எதிர்கொள்ள தேவையான உதவிகளை அமெரிக்கா விரைந்து செய்யும் என அந்நாட்டு அமைச்சர் ஆன்ட்டனி பிளிங்க்கன் கூறியுள்ளார். தடுப்பூசிகள் மற்றும் அதற்கான மூலப்பொருட்களை இந்தியாவுக்கு அமெரிக்கா தர மறுத்தது விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com