ஜோ பைடன், கமலா ஹாரிஸ்க்கு இந்திய தலைவர்கள் வாழ்த்து
அமெரிக்க அதிபராகும் தகுதியை பெற்றுள்ள ஜோ பைடனுக்கும், துணை அதிபராகும் கமலா ஹாரிஸ்க்கும், குடியரசுத் தலைவர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்திய - அமெரிக்க உறவுகளை மேலும் வலுப்படுத்த ஜோ பைடனுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
அதேபோல பிரதமர் நரேந்திர மோடி இருவருக்கும் தனித்தனியாக வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், அமெரிக்க துணை அதிபராக ஜோ பைடன் இருந்தபோது வழங்கிய பங்களிப்பால், இந்திய - அமெரிக்க உறவுகள் வலுப்பெற்றதாக தெரிவித்துள்ளார். அந்த உறவுகள் மிகப்பெரிய உச்சத்துக்கு செல்ல, மீண்டும் நெருக்கமாக பணியாற்றும் எதிர்பார்ப்புடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். கமலா ஹாரிஸ்க்கான வாழ்த்துச் செய்தியில், இது உங்களுடைய சித்திகளுக்கு மட்டுமின்றி எல்லா இந்தியா, அமெரிக்கர்களுக்கும் மிகச்சிறந்த பெருமை தரும் விஷயம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், விவேகமும், முதிர்ச்சியுமுள்ள பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் தலைமையில், நமது பிராந்திய மற்றும் வளர்ச்சிக்கு பயன்தரக் கூடிய நெருக்கமான உறவை இந்தியா எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். இதேபோல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, ப.சிதம்பரம் உள்ளிட்டோரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழ் பாரம்பரியத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை துணை அதிபராக அமெரிக்க மக்கள் தேர்ந்தெடுத்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.