கருணாநிதிக்கு மருத்துவ உதவிகள் செய்ய தயார் - முதல்வர் பழனிசாமி
கருணாநிதியின் குடும்பம் கேட்டுக்கொண்டால் அரசின் சார்பில் அவருக்கு மருத்துவ உதவிகள் செய்ய தயாராக இருக்கிறோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் நலிவு ஏற்பட்டுள்ளதை அடுத்து காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் குழு கருணாநிதியின் இல்லத்திற்கு நேற்று இரவு வருகை தந்தது.மேலும் ஆம்புலன்சும் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். காவேரி மருத்துவமனையில் கருணாநிதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியது " திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சைகளை பெற்று குணமடைந்து வருகிறார். காவேரி மருத்துவமனையில் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கருணாநிதி குடும்பத்தினர் கேட்டுக்கொண்டால் மருத்துவ உதவிகளை வழங்க அரசு தயாராக உள்ளது" என தெரிவித்துள்ளார்.