மேற்கு வங்கம் | இந்தியாவின் முதல் LGBTQ+ நாடாளுமன்ற உறுப்பினராக வாய்ப்பு.. யார் இந்த மேனகா குருசாமி?
தமிழ்நாடு, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 10 மாநிலங்களில், காலியாகவுள்ள 37 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் மார்ச் 16ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில், மேற்கு வங்கத்தில் இருந்து 5 மாநிலங்களைவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதில், மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 4 இடங்களுக்கு, பாஜகவுக்கு 1 இடமும் உள்ளது. இந்த நிலையில்தான் நேற்று, திரிணாமுல் காங்கிரஸ், வரவிருக்கும் மாநிலங்களவை தேர்தலுக்கான தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமைச்சர் பாபுல் சுப்ரியோ, முன்னாள் வங்காள டிஜிபி ராஜீவ் குமார், நடிகர் கோயல் மாலிக் மற்றும் உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் மேனகா குருசாமி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதில், மேனகா குருசாமி என்ற பெயர் இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பெயராக பார்க்கப்படுகிறது. இதற்கான, காரணம் கடந்த 2018-ஆம் ஆண்டு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377 ( இயற்கைக்கு மாறான உறவு) என்பதில் இருந்து தன்பாலின சேர்க்கையை உச்சநீதிமன்றம் நீக்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பில் மனுதாரர்களுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர்களுள் மேனகா குருசாமியும் ஒருவர். இத்தீர்ப்பின் மூலமே, இந்தியாவில் ஒரே பாலினத்தைச் சேர்ந்த இருவர் உறவு சட்டப்பூர்வமானதாகப்பட்டது. மேலும், தன்பாலின திருமண அங்கீகாரம் தொடர்பான வழக்குகளிலும் அவர் வாதிட்டுள்ளார். அதேசமயம், தன்பாலின ஈர்ப்பு குற்றமற்றது என்ற தீர்ப்பிற்கு பிறகு, தனது சக பெண் வழக்கறிஞர் அருந்ததி கட்ஜுவுடனான தனது உறவை அவர் பகிரங்கமாக வெளிப்படுத்தினார்.
இந்த சூழலில்தான், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து மாநிலங்களவை எம்.பி தேர்தலுக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம், நாடாளுமன்றத்தில் நுழையும்பட்சத்தில், மேனகா குருசாமி LGBTQ (தன்பாலின ஈர்ப்பாளர் உள்ளிட்ட பாலின சிறுபான்மையினர்) பிரிவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் எம்.பி என்ற சாதனையைப் படைப்பார்.
மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, சமூகத்தின் விளிம்புநிலை மக்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கருதப்படுகிறது. மேனகா குருசாமியின் வேட்புமனுத் தாக்கல், இந்திய அரசியலில் பாலின சமத்துவம் மற்றும் உள்ளடக்கிய பிரதிநிதித்துவத்தை நோக்கி எடுத்து வைக்கப்பட்ட ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

