காங்கிரஸுடன் இணைகிறதா TMC.. மம்தா பானர்ஜியின் நிலைப்பாடு என்ன?
மேற்கு வங்கத்தில் தேர்தல் தோல்வியால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இரண்டாகப் பிளவுபட்டு, 61 எம்எல்ஏக்கள் மற்றும் பல எம்பிக்கள் மம்தாவுக்கு எதிராக திரும்பிய சூழலில், அபிஷேக் பானர்ஜி டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்து வலுவான கூட்டணியை விரும்புவதாக தெரிவித்தது, மம்தா–சோனியா நெருக்கம் மீண்டும் வெளிப்பட்டது. தவிர, திரிணாமுல் காங்கிரஸை காங்கிரஸுடன் இணைக்கும் சாத்தியத்தை அதிகரித்துள்ளன.
செய்தியாளர்; M.மீரா
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வியடைந்து முதன்முறையாக பாஜக ஆட்சியைப் பிடித்தது. அதேநேரத்தில், தேர்தல் தோல்வி காரணமாக திரிணாமுல் காங்கிரஸின் மூத்த உறுப்பினர்கள் பலரும் கட்சி மீதும் தலைமை மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து கட்சிப் பதவிகளிலிருந்தும் வெளியேறி வருகின்றனர். இதனால் திரிணாமுல் காங்கிரஸ் இரண்டாகப் பிளவுபட்டு உள்ளது.
குறிப்பாக, அக்கட்சியின் 61 எம்எல்ஏக்கள் மம்தாவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அவர்களின் ஆதரவுடன் ரிதாபிரதா, எதிர்க்கட்சித் தலைவராகி இருக்கிறார். இன்னொரு புறம் அவர் கட்சியைச் சேர்ந்த எம்பிக்களில் 28 பேரில் 20 பேரும் மம்தாவுக்கு எதிராக திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை இன்று சந்தித்துப் பேசினார்.
ஒரு வலுவான கூட்டணியை விரும்புவதாகவும், எதிர்க்கட்சிகளின் இந்தக் குழுவில் ராகுல் காந்தியின் தலைமையையே ஏற்பதாகவும் திரிணாமுல் தரப்பு இச்சந்திப்பின்போது தெரிவித்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சிகளை இணைப்பது குறித்த எந்தவொரு முன்மொழிவும் திரிணாமுல் தரப்பிலிருந்தே வர வேண்டும் என்றும், தாங்களாக அத்தகைய நடவடிக்கையை முன்னெடுக்கவில்லை என்றும் காங்கிரஸ் தெளிவுபடுத்தியுள்ளது என்றும் கூறப்படுகிறது.
இதற்கு முன்னதாக, I-N-D-I-A கூட்டணிக் கூட்டத்தின்போது மம்தா பானர்ஜியும் சோனியா காந்தியும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக்கொண்ட புகைப்படங்கள் பரவலாகப் பகிரப்பட்டன. இது நீண்டகால உறவின் அடையாளம் என்று திரிணாமுல் கட்சி X தளத்தில் குறிப்பிட்டிருந்தது.
இவ்வாறு டெல்லியில் மம்தா பானர்ஜி நீண்டகாலம் தங்கியிருப்பது, அவரது மருமகன் அபிஷேக் பானர்ஜி ராகுல் காந்தியைச் சந்தித்தது மற்றும் சோனியா காந்தியுடனான அவரது சந்திப்பு ஆகிய அனைத்தும் வழக்கத்திற்கு மாறான நிகழ்வுகளாக உள்ளன. இந்த நகர்வுகள் மம்தா பானர்ஜி, அக்கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கக்கூடும் என்ற வலுவான பேச்சு எழுந்துள்ளது.

