திருமலை திருப்பதி பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அதிக மாசம் பிரம்மோற்சவம், சக்கர ஸ்நான நிகழ்வுடன் நிறைவுப் பெற்றது.
இந்துக்களின் சந்திர நாள்காட்டி படி இந்த ஆண்டு 13 மாதங்கள் வருவதால், அதிக மாசம் பிரம்மோற்சவ விழா திருமலை திருப்பதியில் கடந்த 19 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து மலையப்ப சுவாமி தினசரி காலை, மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிரம்மோற்சவ நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
ஒன்பது நாட்களாக நடந்து வந்த பிரம்மோற்சவ விழா இன்றுடன் நிறைவுப் பெற்றது. இதையொட்டி மலையப்ப சுவாமி மற்றும் சக்கரத்தாழ்வாருக்கு கோயில் திருக்குளத்தில் திருமஞ்சனமும், தீர்த்தவாரியும் நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க தீர்த்தவாரி முடிந்ததும் கோயில் கருவறைக்குள் மலையப்ப சுவாமியும் உப தெய்வங்களும் கொண்டு செல்லப்பட்டனர். வழக்கமாக தீர்த்தவாரி நடைபெறும்போது திரளான பக்தர்கள் திருக்குளத்தில் புனித நீராடுவர்.
கொரோனா காரணமாக இம்முறை புனித நீராடலுக்கும் தடை விதிக்கப்பட்டது. அடுத்ததாக நவராத்திரியை முன்னிட்டு திருமலையில் ஒன்பது நாட்கள் பிரம்மோற்சவம் கொண்டாடப்படவுள்ளது. அக்டோபர் மாதத்தில் தொடங்கும் இந்நிகழ்ச்சிக்கு பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.