அலர்ட் ஆனது இப்படித்தான்: யெஸ் வங்கியிலிருந்து 1,300 கோடியை எடுத்த திருப்பதி தேவஸ்தானம்
நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் யெஸ் வங்கியை ரிசர்வ் வங்கி தற்காலிகமாக கட்டுப்பாட்டுக்குள் எடுத்துள்ள நிலையில், அதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர்தான் அங்கு டெபாசிட் செய்திருந்த ரூ.1,300 கோடியை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வங்கியிலிருந்து எடுத்துள்ளது.
மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது யெஸ் வங்கி. இந்த வங்கி சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவு வாராக் கடனால் பாதிக்கப்பட்டுள்ளது. யெஸ் வங்கியின் மோசமான நிதி நிலையை கருத்தில் கொண்டு, மத்திய அரசுடன் ஆலோசனை நடத்தி அந்த வங்கி நிர்வாகத்தை 30 நாட்களுக்கு தற்காலிகமாக எடுத்துக் கொள்வதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது. அத்துடன் யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என நிபந்தனையும் விதிக்கப்பட்டது.
இதனால் சென்னை, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள யெஸ் வங்கி ஏடிஎம் மையங்களில் வாடிக்கையாளர்கள் குவிந்தனர். ஆனால் பணம் கிடைக்காததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில் யெஸ் வங்கியில் டெபாசிட் செய்திருந்த ரூ.1,300 கோடியை ஒரு மாதத்திற்கு முன்னர்தான் திருமலை திருப்பதி தேவஸ்தானம் வங்கியிலிருந்து எடுத்துள்ளது. நாட்டில் பணக்காரக் கோயிலாக அறியப்படும் திருப்பதி கோயில், பல்வேறு தனியார் வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்துள்ளது. அதேபோல யெஸ் வங்கியில், ரூ.1,300 கோடி மதிப்பிலாக பணம், தங்கத்தை டெபாசிட் செய்திருந்தது. ஆனால் அந்த தொகையை ஒரு மாதத்திற்கு முன்னதாகவே வங்கியிலிருந்து எடுத்திருக்கிறது. இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி கூறும்போது, வங்கியின் நிதிநிலை மோசமாக இருந்ததை தாம் ஏற்கெனவே உணர்ந்ததாக கூறியுள்ளார். வங்கியின் நிதி நிலையை எனக்கு முன்கூட்டியே புரியவைத்து பணத்தை பாதுகாக்க உதவிய இறைவனுக்குதான் அனைத்து நன்றியும் போய் சேரும்” எனவும் தெரிவித்துள்ளார்.