'தேசத்துரோக வழக்கில் வரம்புகளை நிர்ணயிக்கும் நேரம் வந்துவிட்டது'- உச்ச நீதிமன்றம் அதிரடி

'தேசத்துரோக வழக்கில் வரம்புகளை நிர்ணயிக்கும் நேரம் வந்துவிட்டது'- உச்ச நீதிமன்றம் அதிரடி
'தேசத்துரோக வழக்கில் வரம்புகளை நிர்ணயிக்கும் நேரம் வந்துவிட்டது'- உச்ச நீதிமன்றம் அதிரடி

ஆந்திராவில் ஆட்சியில் உள்ள ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை, அதே கட்சியை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ கனுமுரி ரகுராம கிருஷ்ணம் ராஜு தொடர்ந்து விமர்சித்து வந்தார். கொரோனா சூழலை ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு முறையாக கையாளவில்லை என அவர் குற்றம்சாட்டினார். அவரது கருத்துகளை ஒளிபரப்பியதற்காகவே இந்த இரண்டு தனியார் டிவி சேனல்கள் மீது ஆந்திர மாநில அரசு தேசத்துரோக வழக்குப் பதிவு செய்தது.

இதை எதிர்த்து செய்தித் தொலைக்காட்சி நிறுவனங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட், நாகேஷ்வர ராவ், ரவீந்தர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இன்றைய வழக்கு விசாரணையின்போது, செய்தி தொலைக்காட்சி நிறுவனங்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், "ஆந்திர முதல்வரின் கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் அதிருப்தி நாடாளுமன்ற உறுப்பினரான ராமகிருஷ்ண ராஜுவின் அரசுக்கு எதிரான கருத்தை ஒளிபரப்பியதற்காக எங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று குற்றம்சாட்டினார்.

இதே நபருக்கு எதிராக தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கில் உச்ச நீதிமன்றம்தான் கடந்த வாரம் ஜாமீன் வழங்கியது. அதேபோல சத்தீஸ்கர், அசாம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் 'கருத்து சுதந்திரத்திற்கு எதிராக உள்ள தேசத்துரோக வழக்கு பிரிவை நீக்க வேண்டும்' என கோரி தொடரப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

ஏற்கெனவே கடந்த 1962-ஆம் ஆண்டு வழக்கு ஒன்றில் தீர்ப்பு வழங்கியுள்ள உச்ச நீதிமன்றம், அரசுக்கு எதிரான செயல்பாட்டை எவ்வளவு கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து இருந்தாலும், அதன் காரணமாக பொது அமைதிக்கு குந்தகம் விளையாத வண்ணம் இருந்தால் நிச்சயம் அது தேசத்துரோகம் ஆகாது என உறுதிப்படுத்தியதையும் அவர் எடுத்துக்காட்டினார்.

அப்போது, "செய்தி நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தது ஏன்?" என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு ஆந்திர அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும், இவ்விரு செய்தி நிறுவனங்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து, முதல் தகவல் அறிக்கை பதிந்து இருப்பது பத்திரிகை துறையை நசுக்குவதாக இருக்கிறது என்றும் நீதிபதிகள் கருத்து கூறினர்.

எனவே, உச்ச நீதிமன்றத்தின் அடுத்த உத்தரவு வரும் வரை குறிப்பிட்ட செய்தி நிறுவனங்களுக்கு எதிராக ஆந்திர அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என கண்டிப்புடன் உத்தரவிட்டனர்.

அதுமட்டுமில்லாமல் "தேசத்துரோக வழக்குகள் தொடர்பாக எல்லைகளை வரையறுக்க வேண்டிய நேரமும் வந்துவிட்டது" என்று நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.

சமீபத்தில் தேசத்துரோக வழக்கிற்கு பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், இயற்கை ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் உட்படுத்தப்பட்டு சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் இந்தக் கருத்து மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

- நிரஞ்சன் குமார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com