பயனர்களுக்கு மட்டுமல்ல, ஊழியர்களுக்கும் நிரந்தர Bye சொல்லும் டிக்டாக்! அடுத்து அமெரிக்கா?

பயனர்களுக்கு மட்டுமல்ல, ஊழியர்களுக்கும் நிரந்தர Bye சொல்லும் டிக்டாக்! அடுத்து அமெரிக்கா?
பயனர்களுக்கு மட்டுமல்ல, ஊழியர்களுக்கும் நிரந்தர Bye சொல்லும் டிக்டாக்! அடுத்து அமெரிக்கா?

இந்தியாவில் தடை செய்யப்பட்ட டிக் டாக் செயலியில் பணி புரிந்த இந்தியர்களை, அந்நிறுவனம் பணியிலிருந்து நீக்கியுள்ளது.

குறைந்த அளவிலான நேரம் மட்டுமே உள்ள வீடியோக்களைப் பதிவு செய்து வெளியிடும் செயலிகளில் டிக் டாக் (TikTok) முக்கியமானது. இதன்மூலம் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர்கள் அதிகம். குறிப்பாக, இந்தச் செயலி இந்தியாவில் மிகப்பெரிய அளவில் பிரபலமாக இருந்த நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசு இந்தச் செயலிக்கு தடை விதித்தது.

இந்தியாவின் தகவல் பாதுகாப்பு காரணங்களுக்காக சீனாவைச் சேர்ந்த பைட் டான்ஸ் (Bytedance) நிறுவனத்தை சேர்ந்த இந்த `டிக்டாக்’ செயலி தடை செய்யப்பட்டது. இத்துடன் சேர்த்து இந்தியா மற்றும் சீன நாட்டின் இடையிலான எல்லைப் பிரச்னை மற்றும் இருநாட்டு ராணுவத்தின் தாக்குதல் காரணமாக சுமார் 250க்கும் மேற்பட்ட சீன செயலிகள் தடை செய்யப்பட்டன. அதில் டிக்டாக் செயலியும் ஒன்றென்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் டிக்டாக் செயலியின் பயன்பாடு பயனர்கள் மத்தியில் தடைசெய்யப்பட்டாலும்கூட, டிக்டாக் நிறுவனத்தின் அலுவலகம் இங்கு செயல்பட்டு வந்தது. அப்படி இந்திய அலுவலகத்தில் பணிபுரிந்த டிக்டாக் ஊழியர்கள், பிரேசில் மற்றும் துபாய் சந்தைகளை நிர்வகித்து வந்தனர். இந்த நிலையில், ஊழியர்களாகப் பணியாற்றி வந்த அனைத்து இந்தியர்களையும் டிக்டாக் நிறுவனம் தற்போது பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, அதில் பணிபுரிந்த 40 இந்தியர்களுக்கு டிக்டாக் பிங்க் சீட்டுகளை (pink slips) வழங்கியுள்ளது. அதாவது, நிறுவனத்தின் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதுடன் ஊழியர்களுக்கு ஒன்பது மாத பணிநீக்க ஊதியம் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

சீனா மற்றும் இந்திய எல்லை விவகாரம் குறித்து அதிகம் விவாதிக்கப்பட்டு வரும் இறுக்கமான சூழலில், இந்தியாவில் டிக்டாக் செயல்பாட்டை மீண்டும் கொண்டு வருவதற்காக வாய்ப்புகள் குறைவுதான் என்பது அனைவரும் அறிந்ததே. இதுதொடர்பாக அந்த நிறுவனம் எடுத்த முயற்சிகளும் தோல்வியடைந்தாகக் கூறப்படுகிறது. இதையடுத்துத்தான் டிக்டாக் நிறுவனம் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளது. `இனிமேலும் காத்திருக்கப் போவதில்லை’ என்ற நோக்கத்தில்தான் இந்தியாவில் இருக்கும் அலுவலகத்தை டிக்டாக் மூடுவதாக தெரிகிறது. அதனாலேயே அதில் பணியாற்றும் ஊழியர்களை அப்பணியில் இருந்து விடுவிக்கவும் முடிவு செய்துள்ளது என சொல்லப்படுகிறது.

இதையடுத்து, குறிப்பிட்ட 40 இந்திய பணியாளர்களுக்கும் வரும் பிப்ரவரி மாதத்தின் 28ம் தேதியே கடைசி நாள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், “2020ஆம் ஆண்டு இறுதியில் இந்தியாவில் நிறுவப்பட்ட இந்த செயலி நிறுவனத்தைத் தற்போது நிரந்தரமாய் மூடுவதற்கு முடிவெடுத்துள்ளோம். இந்த நிறுவனத்தில் உழைத்த இந்தியர்களை, அவர்கள் ஏற்படுத்திய தாக்கத்தை இந்த நேரத்தில் பாராட்டுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்தகட்டமாக அமெரிக்காவிலும் டிக்டாக் செயலியின் பயன்பாட்டை நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டிக்டாக்கிற்கு அமெரிக்காவிலும் தடை விதிக்கும் நோக்கத்தில், அதற்கான சட்ட மசோதாவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த டிசம்பர் மாதம் கையெழுத்திட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதையொட்டி அமெரிக்காவில் பாதிக்கும் மேற்பட்ட மாகாணங்களில் உள்ள கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும்கூட டேட்டா அனலிட்டிக்ஸ் நிறுவனமான சென்சார் டவரின் தரவுகளின்படி, 2021 முதல் அமெரிக்காவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியாக டிக் டாக் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதுவும் விரைவில் முடிவுக்கு வரலாமென கணிக்கப்படுகிறது.

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com