புலிகள் காப்பகத்திற்குள் நுழைந்து பெண் புலியை அடித்துக் கொன்ற கிராம மக்கள்..!
மேன் ஈட்டராக அறிவிக்கப்பட்ட ஆவ்னி புலி சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் கிராம மக்களே சேர்ந்து மேலும் ஒரு புலியை கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் யவாட்மால் மாவட்டத்தில் இருக்கும் வனப்பகுதி பந்தர்காவாடா. அங்கு வனத்துறையினரால் ஆவ்னி என பெயரிடப்பட்டுள்ள பெண் புலி அண்மையில் மேன் ஈட்டராக மாறி, 13 பேரை கொன்று தின்றதாக கூறப்பட்டது. பொதுவாக "மேன் ஈட்டராக" மாறும் புலியை வனத்துறையினர் என்கவுண்ட்டர் செய்து கொல்வார்கள். அதன்படி ஆவ்னி புலி கடந்த சில நாட்களுக்கு முன் சுட்டுக்கொல்லப்பட்டது. இது வன ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோகம் ஓய்வதற்குள் கிராம மக்களே சேர்ந்து புலி ஒன்றை அடித்துக் கொன்ற சம்பவமும் அரங்கேறியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் சால்டவ் கிராமத்தை சேர்ந்த ஒருவரை புலி ஒன்று கடித்து குதறியதாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஒன்றாக இணைந்து அங்குள்ள துத்வா புலிகள் காப்பகத்திற்குள் அதிரடியாக நுழைந்துள்ளனர். பின்னர் காப்பகத்தின் காவலரை தாக்கிய அவர்கள் அங்கிருந்த டிராக்டரை கொண்டு பெண் புலி ஒன்றின் மீது அதிரடியாக ஏற்றியுள்ளனர். இதில் பெண் புலிக்கு கடுமையான காயம் ஏற்பட்டது. பின்னர் கொம்புகளை வைத்து அடித்து புலியை கிராம மக்களே அடித்துக் கொன்றுள்ளனர்.
இதுகுறித்து வன அதிகாரிகள் கூறும்போது, 10 வயதான அந்த பெண் புலி எந்தவொரு நபரையும் இதுவரை தாக்கியதில்லை என தெரிவித்தனர். அத்தோடு மட்டுமின்றி கிராம மக்கள் பேச்சுக்கு இடமளிக்காமல் முரட்டுத்தனமாக புகுந்து புலியை கொன்றதாகவும் கூறியுள்ளனர் இதனிடையே புலியை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளன.