வெள்ளத்தில் தப்பித்து வீட்டு மெத்தையில் படுத்து கிடந்த புலி - உரிமையாளர் அதிர்ச்சி
அசாமில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் இருந்து தப்பித்த புலி, வீடு ஒன்றின் படுக்கையறை மெத்தையில் படுத்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கையை இழந்து தவித்து வருகின்றனர். கனமழையால் நீர் நிலைகளில் மட்டம் உயர்ந்து பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக மனிதர்கள் மட்டுமல்லாமல் விலங்குகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. நிறைய விலங்குகள் உயிரிழந்துள்ளன. சில விலங்குகள் வெள்ளத்தில் அடித்து வேறு இடங்களுக்கு செல்லப்பட்டுள்ளன.
இந்நிலையில், அசாம் மாநிலத்தின் காஸிரங்கா பகுதியில் உள்ள வீடு ஒன்றின் படுக்கையறையில் புலி ஒன்று படுத்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. தேசிய பூங்காவைச் சேர்ந்த அந்த புலியானது மழை வெள்ளத்தால் அங்கிருந்து அடித்து வெளியேறியுள்ளது. பின்னர், அந்த புலி தங்குமிடம் தேடி அந்த வீட்டிற்குள் சென்றுள்ளது. புலி வீட்டிற்கு செல்வதை பார்த்த வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார். படுக்கறையில் உள்ள மெத்தையில் புலி படுத்துக் கொண்டது. புலி மிகவும் சோர்வுடனும், பசியுடனும் காணப்படுவதாக பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
அதனையடுத்து, வனத்துறையினருக்கு வீட்டின் உரிமையாளர் தகவல் அளித்துள்ளார். அதிகாரிகள் உடனடியாக அந்த பகுதிக்குள் சென்றுள்ளனர். புலியை பாதுகாப்பாக மீண்டும் பூங்காவிற்கு கொண்டு செல்ல அதிகாரிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டின் ஜன்னல் வழியாக எடுக்கப்பட்ட புலியின் புகைப்படத்தை வனவிலங்கு பாதுகாப்பு துறை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.