முகநூல் காதலனுடன் மனைவி தனிக்குடித்தனம் நடத்தியதால் ஆத்திரமடைந்த கணவர், மனைவியின் கைகளை கட்டி 4வது மாடியில் இருந்து தூக்கி எறிந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் தாஜ்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் ரித்திகா சிங். இன்ஸ்டாகிராமில் 44 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஃபாலோயர்களைக் கொண்ட பிரபலமாக வலம்வந்தவர். ஃபேஷன், உணவு, பயணம் குறித்த பதிவுகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தவர்.
இவர் 2014 ஆம் ஆண்டு ஃபிரோசாபாத் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் கவுதம் என்பவரை திருமணம் செய்தார். மூன்று வருடங்களுக்கு பிறகு 2017இல் ரித்திகாவிற்கு முகநூல் மூலமாக விபுல் அகர்வால் என்பவருடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு கணவர் ஆகாஷை பிரிந்து விபுலுடன் சேர்ந்து வாழத் துவங்கினார் ரித்திகா.
லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இணைந்து வாழ்ந்து வந்த ரித்திகா - விபுல் இணை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஓம் ஸ்ரீ அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறினர். இந்நிலையில் நேற்று 4வது மாடியில் உள்ள ரித்திகாவின் பிளாட்டுக்கு இரண்டு ஆண்கள், இரண்டு பெண்களுடன் ஆகாஷ் வந்தார். அத்துமீறி உள்நுழைந்த இந்த கும்பல் ரித்திகா, விபுல் இருவரையும் தாக்கத் துவங்கியுள்ளனர்.
விபிலின் கைககளை தாவணியால் கட்டி குளியலறையில் பூட்டியுள்ளனர். ரித்திகாவின் கைகளை கயிற்றால் கட்டி பால்கனியில் இருந்து தூக்கி வீச, அதிர்ந்து போயுள்ளார் விபுல். பின்னர் இந்த கும்பல் தன்னையும் கொன்றுவிடும் என பயந்து குளியலறையின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்ததும் உள்ளே வந்த இரு ஆண்கள் வெளியே தப்பி ஓடிவிட்டனர்.
மீதமிருந்த ஆகாஷ் மற்றும் அவருடன் வந்த 2 பெண்களையும் பிடித்து அக்கம்பக்கத்தினர் போலீசில் ஒப்படைத்தனர். ரித்திகாவின் உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சிசிடிவி காட்சிகளை வைத்து தப்பியோடிய இருவரையும் தேடும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.