110 அடி ஆழ்குழாய் கிணற்றில் சிக்கிய சிறுமி - மீட்புப் பணி தீவிரம்
பீகார் மாநிலம் முங்கர் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை திடீரென காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் அந்த பகுதியே சோகத்தில் மூழ்கியது. அப்போது குழாயில் இருந்து பேசுவது போல் முனகல் சத்தம் கேட்க பெற்றோர் மீண்டும் தேடத் தொடங்கினர். அப்போது சிறுமி விளையாடிக் கொண்டிருந்த பகுதியில் இருந்த ஆழ்துளை கிணற்றில் இருந்தே சத்தம் வந்ததை பெற்றோர் கண்டுபிடித்தனர். வெளிச்சம் அடித்து பார்த்த போது உள்ளே யாரோ சிக்கிக் கொண்டிருப்பதை அறிந்து, மீட்பு படையினருக்கும் காவல்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
சிறுமியை மீட்கும் பணியில் மாநில பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து பேசிய காவல்துறை கண்காணிப்பாளார் கௌரவ் மங்க்ளா,“ சிறுமிக்கு தேவையான ஆக்சிஜன் கொடுக்கப்பட்டுள்ளது, மருத்துவ குழு தயார் நிலையில் இருக்கிறார்கள், மீட்பதற்கான நடவடிக்கையை உடனடியாக தொடங்கி விட்டோம் என்பதால் பாது தூரத்துக்கு தோண்ட முடிந்துள்ளது. கண்டிப்பாக மீட்டு விடுவோம்”என்றார். சிறுமியின் உறவினர் ஒருவர் கூறும் போது “ சிறுமியும் அவரது பெற்றோரும் தாயின் உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார்கள், அனைத்து சிறுவர்களோடும் சேர்ந்து ஜாலியாக விளையாடிக் கொண்டிருந்தார், எப்படி கிணற்றுக்குள் விழுந்தார் என்பது யாருக்குமே தெரியவில்லை” என்றார்
சம்பவத்தை அடுத்து நிகழ்விடத்துக்கு வந்த மாநில பேரிடம் மீட்பு படையினர் தொடர்ந்து மீட்பு பணியை செய்து வருகின்றனர். மாநில முதலமைச்சர் சிறப்பு உத்தரவு பிறப்பித்துள்ளதால் , அனைத்து உதவிகளையும் பெற்று சிறுமியை மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தனர். 40 அடி வரை தோண்டியுள்ள மீட்பு படையினர் , சிறுமி சுவாசிக்க தேவையான ஆக்சிஜனை நேரடியாக செலுத்தியுள்ளனர். சிறுமி நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.