பைக்கை நிறுத்த முயன்ற போக்குவரத்து காவலர்... பரிதாபமாக உயிரிழந்த சிகிச்சைக்கு சென்ற 3 வயது குழந்தை!
கர்நாடகா மத்தூர் தாலுகா கோரவனஹள்ளியைச் சேர்ந்தவர்கள் அசோக் மற்றும் வாணிஸ்ரீ தம்பதியினர் . இவர்களுக்கு 3 வயதில் ஹ்ருதிஷா என்ற குழந்தை உள்ளது.
சம்பவத்தினத்தன்று, வீட்டின் அருகில் விளையாடி கொண்டிருந்த குழந்தை ஹ்ருதிஷாவை நாய் கடித்துள்ளது . இதனால், வானிஸ்ரீயும் அவரது மைத்துனர் பாஸ்கர் கவுடாவும் அருகிலிருந்த மத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்துச் சென்றனர். ஆனால், மத்தூரில் ரேபிஸ் தடுப்பூசி கிடைக்காததால், அங்குள்ள மருத்துவர்கள் முதலுதவி அளித்தநிலையில், மாண்டியாவில் உள்ள மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
இதனால், காலை 10.30 மணியளவில், ஹெல்மெட் இல்லாமல் பைக்கில் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். செல்லும் வழியில் ஸ்வர்ண சந்திரா அருகே இருந்த போக்குவரத்து காவலர்கள் ஹெல்மெட் அணியாததால் கவுடாவின் பைக்கை தடுத்தி நிறுத்தியுள்ளனர். குழந்தையை நாய் கடித்துள்ளது என்று கூறவே அவர்களை போலீஸார் அனுமதித்துள்ளனர்.
பிறகு சில மீட்டர் தொலைவில் மற்றொரு போக்குவரத்து காவலர் தடுத்து நிறுத்த முயன்றுள்ளார். இதனால், கட்டுப்பாட்டை இழந்த கவுடா நிலைதடுமாறவே பைக்கின் இருந்த மூவரும் கீழே விழுந்துள்ளார் . இந்தநிலையில், ஹ்ருதிஷாவின் மீது லாரி மோதவே குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
நொடிப்பொழுதில் நிகழ்ந்த இந்த விபத்தில், குழந்தை ஹ்ருதிக்ஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. போலீஸார் நடவடிக்கையால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட போக்குவரத்து காவலர்களை பணியிடை நீக்கம் செய்ய கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனைதொடர்ந்து, ஜெயராம், நாகராஜூ, குருதேவ் ஆகிய காவல் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இது குறித்து காவதுறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், தாலுகா மருத்துவமனையிலேயே தடுப்பூசி கிடைத்திருந்தால் குழந்தைக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்று குடும்பத்தினர் வருத்தம் தெரிவிக்கின்றனர்.