பாயல் தத்வியின் தற்கொலை குறிப்பை குற்றம் சாட்டப்பட்டவர்கள் அழித்துள்ளனர் : போலீஸ்

பாயல் தத்வியின் தற்கொலை குறிப்பை குற்றம் சாட்டப்பட்டவர்கள் அழித்துள்ளனர் : போலீஸ்
பாயல் தத்வியின் தற்கொலை குறிப்பை குற்றம் சாட்டப்பட்டவர்கள் அழித்துள்ளனர் : போலீஸ்

குற்றம் சாட்டப்பட்ட மூன்று மருத்துவர்கள் பாயல் தத்வி எழுதிவைத்த தற்கொலைக் குறிப்பை அழித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

மும்பையில் உள்ள மருத்துவக் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தவர் பாயல் தத்வி. இவர் ஆதிவாசி பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர். கல்லூரியில் சேர்ந்ததில் இருந்தே, மூத்த மருத்துவர்கள் அவரை ரேகிங் செய்ததாக தெரிகிறது. அத்துடன் அவரின் சாதிப் பெயரை குறிப்பிட்டு இழிவுபடுத்தியதாகவும் கூறப்படுகிறது. 

இதையடுத்து கடந்த மே 22 ஆம் தேதி பாயல் தத்வி தனது அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். அதேசமயம் மாணவி பாயல் தத்வியை தொடர்ச்சியாக ரேகிங் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட மூன்று மருத்துவர்கள் அவரின் தற்கொலைக்கு பின் தலைமறைவாகினர். மூத்த மருத்துவர்களான ஹேமா அஹுஜா, அங்கிட்டா காண்டெல்வால், பக்தி மேக்ஹே ஆகியோர் மகாராஷ்டிரா மருத்துவர்கள் சங்கத்திற்கு ஒரு கடிதத்தை எழுதிவிட்டு தலைமறைவாகினர்.

அதில், ‘அதிக பணிக்கு ரேகிங் என்று பெயர் வைத்தால் நாங்கள் அனைவரும் ரேகிங்கிற்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறோம்” என குறிப்பிடப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து மே 28 ஆம் தேதி இந்த மருத்துவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 

இதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட மூவரும் ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். ஆனால் அவர்களுக்கு ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. 

இந்நிலையில், “பாயல் தத்வி தற்கொலைக்கு முன்னதாக இந்த மூவர் குறித்தும் குற்றம் சாட்டி 3 பக்கத்தில் குறிப்பு ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதை தற்போது காணவில்லை. ஆனால் எழுதி வைத்த குறிப்பை தனது செல்போனில் தத்வி புகைப்படம் எடுத்தும் வைத்துள்ளார். அந்த குறிப்புகள் அழிக்கப்பட்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. அதேசமயம் மாநில தடயவியல் ஆய்வக அதிகாரிகள் அதை மீட்டெடுத்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர்கள் தத்வியின் தற்கொலைக்கு பிறகு முன்னதாக அவரின் அறைக்கு சென்று செல்போனில் இருந்த ஆதாரங்களை அழித்துள்ளனர்.” என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com