காஷ்மீர் விவகாரம்: பிரிட்டனில் இந்திய தூதரகம் முன்பு பாகிஸ்தானியர்கள் போராட்டம்
காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரிட்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு பாகிஸ்தானியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370ஆவது சட்டப்பிரிவின் ஷரத்துக்களை மத்திய அரசு அதிரடியாக நீக்கியுள்ளது. அதேபோல், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் அம்மாநிலம் பிரிக்கப்படவுள்ளது. இந்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலிலும் முறையிட்டுள்ளது.
இந்நிலையில், காஷ்மீர் பிரச்னைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், பிரிட்டனில் உள்ள இந்திய தூதரகம் முன் திரண்ட பாகிஸ்தான் நாட்டவர்கள் சிலர் கொடிகள் மற்றும் பதாகைகளுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். பதாகைகளில் ‘காஷ்மீர் எரிந்து கொண்டிருக்கிறது’, ‘சுதாந்திர காஷ்மீர்’ உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. அப்போது, இந்தியர்கள் சிலரும் அங்கு திரண்டு பாகிஸ்தான் நாட்டவர்களின் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால், இருதரப்பினரிடையே இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இதனால் பதற்றம் ஏற்பட்டது. அப்போது அங்கு குவிக்கப்பட்டிருந்த பிரிட்டன் பாதுகாப்புப்படையினர், இருதரப்பினரையும் கலைந்து போகச் செய்தனர்.