தினமும் 40,000 பேருக்கு உணவு: 6 வருடங்களாக அன்னமிடும் பெண்கள்... இதுதான் உண்மையான தி கேரளா ஸ்டோரி!
கேரளாவில் உள்ள ஆயிரக்கணக்கான பெண்கள் தங்களது வீடுகளில் தங்களுக்கு சமைக்கும் உணவோடு கூடுதலாக சமைத்து பொட்டலம் கட்டி தன்னார்வலர்களிடம் கொடுக்கின்றனர். இவ்வாறு ஒவ்வொரு வீடுகளிலிருந்தும் சேகரிக்கப்படும் உணவானது அரசு மருத்துவமனைகளில் தங்கியிருக்கும் சுமார் 40 ஆயிரம் பேருக்கு தினமும் விநியோகிக்கப்படுகிறது. அதுவும் முற்றிலும் இலவசமாக.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த (DYFI) உறுப்பினர்கள், திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கும், உடன் தங்கியிருப்பவர்களுக்கும் ஒரு வேளை உணவாவது வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் 'ஹிருதயபூர்வம் பொதிச்சோறு' அன்னதான திட்டத்தை கடந்த 2017 புதுவருட நாளில் தொடங்கினர். இந்த திட்டத்தின்கீழ் நாள்தோறும் 300 பேருக்கு உணவு வழங்கத் தொடங்கி, அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து இன்று தினமும் சுமார் 40,000 பேருக்கு உணவு வழங்கப்படுகிறது.
ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தொய்வின்றி தொடரும் இந்த 'ஹிருதயபூர்வம் பொதிச்சோறு' அன்னதான திட்டம் இன்று கேரளாவின் 14 மாவட்டங்களில் 50 அரசு மருத்துவமனைகளுக்கு விரிவடைந்து நாள்தோறும் சுமார் 40,000 பேருக்கு பொதி சோறு பொட்டலங்கள் தேடித்தேடி விநியோகிக்கப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் எந்தெந்த மருத்துவமனைகளில் எத்தனை பேருக்கு உணவு தேவைப்படுகிறது என்கிற விபரத்தை சேகரித்து வைத்துக்கொள்ளும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள், அதற்கேற்ப தங்களது தொடர்பில் உள்ள குடும்பப் பெண்களிடம் உணவுத் தேவையை தெரிவிக்கின்றனர். அப்பெண்கள் காலையில் தங்களது வீட்டில் தங்களுக்கு சமைக்கும் உணவோடு சேர்த்து கூடுதலாக சமைத்து பார்சல் கட்டி தயாராக வைத்திருக்கின்றனர். பின்னர் வீடுதேடி சேகரிக்க வரும் தன்னார்வலர்களிடம் உணவு பொட்டலங்களை ஒப்படைக்கின்றனர். அவர்கள் மொத்தமாக சேகரித்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கும், நோயாளிகளுடன் தங்கியிருப்பவர்களுக்கும் ஏரியா வாரியாக பிரித்து மதியத்துக்குள் வழங்கிவிடுகின்றனர். இலவச உணவு என்பதை விடவும் வீட்டு உணவு சாப்பிட்ட திருப்தி அவர்களுக்கு கிடைக்கிறது.
வெள்ளப் பாதிப்பு, கொரோனா பெருந்தொற்று, லாக்டவுன் ஆகிய நெருக்கடியான காலக்கட்டத்தின் போதும் 'ஹிருதயபூர்வம் பொதிச்சோறு' அன்னதான திட்டம் தொய்வின்றி நடந்திருக்கிறது. இதுகுறித்துப் பேசிய ராஜ்யசபா எம்.பி. ஏ.ஏ.ரஹீம், "ஒட்டுமொத்த சமுதாயத்தின் ஆதரவினால் பொதி சோறு விநியோகம் தங்கு தடையின்றி நடந்து வருகிறது. நாங்கள் ஒருவருக்கு தேவையான உணவு மட்டும் கேட்டாலும், சில பெண்கள் 3 பேருக்கு தேவையான உணவை கொடுத்து விடுவார்கள். இதை அளவில்லா சாப்பாடு என்பதைவிட அளவில்லா அன்பு என்று சொல்லலாம். இந்த அன்னதான திட்டத்தில் யார் வேண்டுமானாலும் உணவு சமைத்து தரலாம். யார் வேண்டுமானாலும் பார்சல்களை சேகரித்து எங்களிடம் ஒப்படைக்கலாம். இது வெறும் சமூக சேவை மட்டுமல்ல. இதுவொரு பாடம். இந்த நவதாராளவாத யுகத்தில் இளைஞர்கள் சுயநலம் நிறைந்த சூழலில் வளர்கின்றனர். இந்த முயற்சியின் மூலம், இளைஞர்கள் தங்கள் வாழ்நாளில் இதுவரை சந்தித்திராத பசியால் வாடும் மக்களுக்கு உணவு வழங்க முன்வருகின்றனர்" என்கிறார் அவர்.
பெரும்பாலும் சாதம், சாம்பார், வெஜ் சப்ஜி ஆகியவையே பெறப்படுகிறது. சில சமயங்களில் பொதி சோறு பார்சலுக்குள் உணவு மட்டுமின்றி, ஆச்சரியமான தருணங்களும் இருக்கும்.
மலப்புரத்தைச் சேர்ந்த பேராசிரியரான ராஜேஷ் மோஞ்சி, கடந்த ஜனவரி மாதம் தனது தாயாரின் சிகிச்சைக்காக கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் தங்கி இருந்த நாளில் 'ஹிருதயபூர்வம் பொதி சோறு' பார்சல் பெற்றிருக்கிறார். அந்த பார்சலை திறந்து பார்த்தபோது உள்ளே ஒரு குறிப்பு எழுதப்பட்டிருந்தது. அந்த குறிப்பில், "சேட்டா, சேச்சி, தாத்தா, அம்மா... இந்த உணவுப் பொட்டலத்தை யார் வாங்கியிருந்தாலும் என்னை மன்னித்து விடுங்கள். என் அம்மா இன்று வீட்டில் இல்லை. பள்ளிக்குச் செல்லும் அவசரத்தில் இந்த உணவை தயார் செய்தேன். உணவு சற்று சுமாரான ருசிதான். அதனால் முதலிலேயே மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் விரைவில் குணமடைய வேண்டும்" என்று எழுதப்பட்டிருந்தது.
இதைப் படித்ததும் நெகிழ்ச்சியில் உறைந்துபோன ராஜேஷ் மோஞ்சி அந்த குறிப்பை அப்படியே போட்டோ எடுத்து ஃபேஸ்புக்கில் பகிர்ந்தார். அச்சமயத்தில் அது வைரலாக பரவியது. அந்த உணவை சமைத்தது ஒரு சிறுவனா சிறுமியா என்பது தெரியவில்லை. ஆனால் அந்த சாப்பாட்டில் இருந்த ஒவ்வொரு பருக்கையிலும் அந்த குழந்தையின் அன்பு நிறைந்திருந்தது என ராஜேஷ் தனது பதிவில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார்.
கேரளாவில் உள்ள ஆயிரக்கணக்கான பெண்களின் பேருதவியோடு நடந்துவரும் இந்த உணவு வழங்கும் சேவை குறித்த தகவல் சமூக ஊடகங்களில் பரவி, பல்வேறு தரப்பினரின் பாராட்டையும் பெற்று வருகிறது. 'இறக்கத்தான் பிறந்தோம்; அதுவரை இரக்கத்தோடு இருப்போம்' என்பதற்கு முன்னுதாரணமாக வாழ்ந்துவரும் கேரள பெண்களை தலைவணங்குகிறோம் என்று நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார்.